ஆங்கிலேயரின் பார்வையில்
••••••••••••••••••••••••••••••••••••••••
மருதுபாண்டியர்கள் !
•••••••••••••••••••••••••••••
திருநெல்வேலி சீமை சரித்திரம் என்ற நூலை ஆங்கிலேயர்கள் கடிதங்களை கொண்டும், அப்போதைய பாளையப்பட்டுகளின் வரலாற்று சம்பவங்களை கொண்டும் வடிவமைத்து தொகுத்த திரு.எஸ். குருகுஹதாஸப்பிள்ளை அவர்கள். தனது நூலில் மருதுபாண்டியர்களைப்பற்றி தந்துள்ள தகவல்களை இங்கு பதிகிறேன். மேற்கண்ட பிள்ளை அவர்கள் ஆங்கிலேய விசுவாசி மற்றும் எட்டப்பரின் காரியதரிசி ஆகவே இவரின் எழுத்துக்களில் எட்டயபுரத்து ராஜபக்தி பளிச்சிடுகிறது. இனி...
மருதுகள்!
"""""""""""""""
"சடையக்கத்தேவரின் நேர் சந்ததியினர் என்று சொல்லிச் சிவகங்கைச் சீமையைப் பிடித்து 21 வருஷங்களாக ஆட்சி புரிந்து, கட்டபொம்மு, ஊமைத்துரையாதியவர்களுக்கு உதவி புரிந்து கும்பினித்துரைத்தனத்தாருக்கு விரோதிகளாக இருந்த சின்னமருது பெரியமருது என்ற இருவரில் வெள்ளையசேர்வை என்ற பெரிய மருது என்பார், சீமைக்காரியங்களை நடாத்துவதில் கவலையற்றவர். ஆனால் அவருக்கு வேட்டையாடுவதில் மிகுந்த ஆசை படைக்கப்பட்டனிமித்தம் அவரது வாழ்நாட்களை வேட்டையாடுவதிலும் தேகவலி படைத்துள்ள பலீஷ்டத்துவமுள்ள விளையாட்டுகளிலும் உற்சாகமாகப் போக்கினார். அவர் நிதானத்துக்கு மிஞ்சிய உயரமுடையவர். தேகபலத்திலோ அவரை ஒப்பாரும் மிக்காரும் அக்காலத்தில் இப்பிராந்தியங்களில் வேறு எவருமிலர். அதிக தேகவலி வாய்க்கப் பெற்றிருந்தது பற்றி காட்டுறை மிருகங்களான கரடி, புலி,முதலிய துஷ்ட மிருகங்களை எவரது சகாயத்தையும் நாடாமல் தனிமையாகவே நின்று வேட்டையாடிக்கொல்வார்.அதுவுமின்றி அப்போது "செலாவணி" யாய் விளங்கிக்கொண்டிருந்த ஆற்காட்டு முழு ரூபாயைக் கையில் வைத்து துகள் துகளாக ஆக்கிவிடுவார். இராஜ்ய பாரத்தில் அவருக்கு சிறிது கூட அக்கறையின்மையால் சுயேச்சையாக வனவாசிகளைப்போல் அலைந்து கொண்டிருந்தார். அக்காலத்தில் இவரை மஹாபலீஷ்டரெனக் கொண்டாடிய தஞ்சாவூர், திருச்சினாப்பள்ளி, மதுரை, முதலிய ஜில்லாக்களில் வசித்த வெள்ளைக்காரத்துரைமார்கள் வேட்டைக்கு இவரைக் கூட்டிச்செல்வது வழக்கமாக இருந்தது. வெள்ளைக்காரர்கள் வேட்டைக்குச் செல்லும் காலங்களில் பெரியமருதுவின் சகாயத்தை தாடிக் கேட்டுக்கொள்வார்கள். இன்ன இன்ன இடங்களில் இன்ன இன்ன வேட்டை கிடைக்குமென்பது பெரியமருது ஒருவருக்கே தெரிந்திருந்ததால் அவருடன் சென்றால் வேட்டை கிடைக்காது போகாதென்றும் துரைமார்களுக்கு நன்கு தெரிந்ததாம். பெரிய கடுவாயைக்( புலி) கண்டுகொண்ட துரைமார்கள் ஆயுதபாணிகளான வேட்டை ஆட்களின் மத்தியில் சூழ்ந்திருப்பினும் பெரியமருது அத்தகைய கடுவாயைக் தனிமையாகவே நின்று எதிர்த்து கொன்று விடுவார்.இதுபோன்ற வேட்டைகளில் காலங்கழிப்பது அரண் அற்ற நாட்டினர்களுக்குச் சோம்பேறித்தனமெனத் தோன்றினாலும் அரணும் மலையுமடர்ந்த நாட்டினர்க்கு இது இன்றியிருத்தல் அபாயத்திற்கு இடனாகுமென்றது நிச்சயம். துஷ்ட மிருகங்கள் ஒழிந்த முயல், மான், மிளா, முதலியவைகளையும் பட்சி ஜாதிகளையும் வெள்ளைக்கார ஷிகாரிகளிடம் விரட்டிவிட்டு அவர்களுக்கு வேட்டை காண்பிப்பார். நிமிராடை ஒத்த இவரிடமிருந்து "உவெல்ஷ்துரை" மதுரையிலிருந்த காலமான 1795 ல் அநேக சௌகரியங்களைப் பெற்றிருந்தார்.
சின்னமருதுவே சீமைக்கு ராஜனாக விளங்கினார். அவருக்கு வாசஸ்தலம் சிறுவயலென்ற ஊர். அவர் கருமை நிறமுடையவராயும், பார்வைக்கு கெம்பீரத் தோற்றத்துடன் சுலக்ஷண புருஷராயும் காணப்பட்டவராக இருந்தார். அவரை யாவரும் எச்சமயத்திலும் பேட்டி கண்டு உரையாடலாம். ஒரு பெரிய நாட்டிற்கு அதிபதியாக இருந்தும் நிர்பயமாகத் திறந்த வெளியான பங்களாவில் கட்டும் காவலுமின்றி குடியிருந்தனர். உவெல்ஷ்துரை அன்னோரை 1795 -ம் வருஷம் பெப்ரவரி மாதம் பார்க்கும் சமயத்தில் அவரிடம் இன்னார்தான் என்ற கட்டுப்பாடற்று எவரும் வந்து பேட்டி கண்டு கொண்டும் போய்க்கொண்டுமே இருந்தார்கள் என்றும். அப்படி அங்கு வந்தூகொண்டும் போய்க்கொண்டுமிருந்தோர் அவரது புகழைக்குறித்து வாழ்த்துநர்களும் கட்டியம் கூறுநர்களுமாகியவர்களின் சத்தம் சதா கிண்ணன் என்று தொனித்தவண்ணமாகவே இருந்து கொண்டிருக்குமென்றும் குறிப்பிட்டுள்ளார். உவெல்ஷ்துரை இதற்கு முன் ஒருசமயம் தற்செயலாகச் சிவகங்கை நாட்டுவழி போகும்படி நேரிட, அப்போது இவர்களுக்குள் சிநேகம் உண்டாயது. அதே வருஷம் சிறிது காலம் தொடர்ச்சியாக மதுரையில் வசிக்கும்படிக்கு உவெல்ஷ்துரைக்கு நேர்ந்த பொது, அடிக்கடி ஒருவகையான இனிப்புள்ள பம்பளி மாஸூப் பழங்களையும் ஒருவகை உயர்ந்த சம்பா அரிசியினையும் சிவகங்கையிலிருந்து அனுப்பிக்கொண்டிருந்தார். அதுபோன்ற நல்ல ஜாதிப்பழத்தை இந்தியாவில் வேறு எப்பாகத்திலும் கண்டதில்லை என்று உவெல்ஷ்துரை கூறியுள்ளார். ஈட்டி வல்லயமாகிய ஆயுதங்களைப் பிரயோகிக்கும் முறையை உவெல்ஷ்துரைக்குக் கற்பித்துக்கொடுத்தோர் அவ்விருவரே ஆவர். வளரி கொண்டு எறியும் விதத்தையும் துரையவர்களுக்கு சொல்லிக்கொடுத்தவர்களும் அவர்களே. வளரி எறிவதனால் ஆயிரம் கெஜம் தூரம் வரை லக்ஷியம் விலகாதென்றதையும் துரைக்கு மெய்ப்பித்துக்காட்டியுமிருக்கிறார்கள். இத்தகைய சூரர்களைக் கால கதியால் யுத்தமென்ற காரணத்தை முன்னிட்டும் சாதாரண மனிதர்களைக் கொண்டு வேட்டையாடிக் காயப்படுத்திப் பிடித்துக் காவலில் வைத்து கடைசியில் தூக்கிலிட்டு அவ்விருவர்களைக் கொல்ல நேர்ந்ததும் கால வித்தியாசந்தான் என்று பரிதாபத்துடன் கூறியுள்ளார். பெருந்தேங்காய் அளவுள்ள இரும்புக்குண்டு ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு தன் முழு வலியுடன் பெரியமருது எறிவதனால் தென்னை, பனை முதலிய மரங்களின் தலைப்பாரத்திலுள்ள காயின் குலைகளும், மட்டைகளும் அறுந்து விழும் என்பார் அக்காலத்திய பெரியார் என்றது கர்ணபரம்பரை. மருதுக்களைப் பற்றி உவெல்ஷ்துரை கூறியிருப்பவை இதை வாசிக்கும் பெரும்பாலற்கு உயர்வு நவிற்சியணி (அதிசயோக்தி) என்று தோற்றல் கூடும். அற்றன்று. பாளையப்பட்டுகளிற் வசிப்போர்க்கு இவை போன்ற செய்கைகள் சாதாரணம் என்றென்றாலும் அவை உண்மை என்பதைக் கண்கூடாக் கண்ட காட்சியின் பயன் என்பேம். சிவகங்கை அரயர்களில் ஒருவரான கௌரி வல்லபத்தேவரும் பலீஷ்டத்துவம் வாய்க்கப் பெற்றாருள் ஒருவராவார்.
பிரின்ஸ் ஆப் உவெல்ஸ் தீவு
""""""""""""""""""""""""""""""""""""""""""
பிரின்ஸ் ஆப் உவெல்ஸ் தீவீபங்களுக்கு த்வீபாந்தர சிக்ஷை விதிக்கப்பட்டு அனுப்பப்பட்ட 70 பேர்களில் ஒருவரான சின்னமருதுவின் குமாரரை 18 வருடங்களுக்குப் பின்னர் உவெல்ஷ்துரை பினாங்கில் வைத்து கண்டுகொண்டனர் என்பதை மட்டும் பிஷப் கால்டுவெல் துரை தன்னுடைய திருநெல்வேலி சரித்திரத்தில் கூறிவிட்டு சும்மா இருந்து விட்டனர் என்றது சரியாகத் தோற்றப்படாததால் அதன் முழு விபரங்களை நாமிங்கு சொல்ல நேரிடுவதால் நாம் பிரஸ்தாபிக்கும் காலத்தில் அந்த சிவகங்கை சீமையும் லக்ஷிங்டன் ( லூசிங்டன்) துரையின் ஆட்சியிலிருந்தமையாலும் அந்நிகழ்ச்சியின் சம்பந்தம் திருநெல்வேலி ஜில்லாவைப் பொறுத்துள்ளதின் பயனாவதாலும் இங்கு அதனை எடுத்துச் செல்வது அவசியமாம் என்க.
கலகங்களும் சச்சரவுகளும் அடங்கியதன் பின்னர், தென்சீமைப் பட்டாளத்தைப் பாளையங்கோட்டைக்கு அனுப்பிய வைத்து விட்டு, உவெல்ஷ்துரையை அப்பட்டாளத்திலிருந்தும் துண்டித்துக் கப்பலில் ஏற்றுவித்துத் தீவாந்தரங்களுக்கு அனுப்புவதற்கென்று முன்னமே தயாராகக் கொண்டு வந்து தூத்துக்குடியில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் மேல்விசாரணைக் கர்த்தாவாக நியமனமடைநாதிரூந்ததால்; அந்த உத்தரவின் பிரகாரம் அவர் தூத்துக்குடி போய்ச் சேர்ந்தனர். அங்கு அன்னோர் செல்லவும், அவருடைய பழைய சிநேகிதரான சின்னமருதுவின் குமாரருள் இறந்து போனவர்களை நீக்கி மீந்துள்ள ஒரே குமாரரும் ஆயுள்வரை த்வீபாந்தர சிக்ஷை விதிக்கப்பட்டவரான துரைசாமி என்றவரை விலங்கிட்டுப் பூட்டப்பட்டிருபதையும், 70 பேர்களில் அவரும் ஒருவர் என்பதையும் தெரிந்து மனம் நொந்தவராயினர். சாத்மீகத்துடனும் பெருந்தன்மையுடனும் அச்சிறுவர் தனக்கு விதித்துள்ள தண்டணையைக்குறித்துச்சிறிதளவிலுங்கூட முணு முணுக்காது காணப்பட்டாரென்றாலும், அவரை அந்நிலையில் காணும் எவருக்கும் அவர் மாட்டு இரக்கம் தோன்றாது இருக்கமாட்டாது என்பது நிச்சயமாகும். உவெல்ஷ்துரையின் பந்தோபஸ்தில் அவரை வைக்கப்பட்டிருந்ததாலும் அவ்விருவரும் ஒரே ஜாகையில் வசிக்க நேர்ந்த காரணமாகவும் அவர்கள் வசித்த இல்லம் ஒரு அரண் அமைந்துள்ள மாளிகையாக இருந்தபடியாலும் தன்னை விட்டு அவர் தப்பித்து ஓடிவிடல் கூடாமை என்று அறிந்து அவருடைய விலங்குகளைக் கழற்றிடும் சந்தோஷகரமான சந்தர்ப்பம் உவெல்ஷ்துரைக்குக் கிட்ட, அவ்வாறே செய்ததுமின்றி அவரைச்சூழ்ந்திருந்த பழைய வேலையாட்கள் யாவரையும் நீக்கிவிட்டார். பின்னர் பல வருஷங்கள் கழிந்த காலத்தில் மீண்டும் ஒரு முறை அவர் இத்தீவிற்கு வந்த போது ஒரு தேகம் மெலிந்த முதிய தோற்றம் பெற்ற கிழவன் ஒருவன் துரையவர்கள் வருகையறிந்து பார்க்க வந்த கால் , துரையவர்கள் சந்தேகத்துடன் பெயர் என்ன வெனக் கேட்க அம்முதியவர் " துரைசாமி " எனும் போது அப்பெயர் உவெல்ஷ்துரை அவர்களின் நெஞ்சில் ஈட்டி போலப் பாய்ந்தது என்கிறார். துரையவர்கள் என்னால் உமக்கு வேண்டிய காரியமென்ன செய்கிறோம் எனவும், துரைசாமி தான் கொண்டு வந்திருந்த கடிதங்களை காட்டி இதனை எனது பந்துக்களிடம் சென்று சேர்க்க முடியுமா என்று தயவாய் வேண்ட ..., துரையவர்கள் இதற்கு முன்பு தங்களுக்கு கும்மாந்தராக இருந்தபடியாலும் மேஜர் பானர்மேன் துரையே இப்போது அங்கு கவர்னராக இருப்பதாகவும், அவர் பக்ஷமும், நிதானமும் வாய்க்கப்பெற்ற குணமுடையவரென்றாலும், அப்படி செய்ய வைப்பது தேசத்தின் சட்டத்திற்கு மாறுபட்டதாவதால் அவரால் கூடாது காரியமாகும் என்று சொல்லிவிட்டார். இதற்கு சிறிது காலத்திற்கப்பால் கவரண்மெண்ட்டாரால் பிறப்பிவிக்கப்பட்ட ஒரு உத்தரவை ஆதாரமாகக் கொண்டு பினாங்கிலுள்ள கவரண்மெண்ட்டார் , சின்னமருதுவின் குமாரரான துரைசாமி என்பாரை விடுதலை செய்தனரென்றும், அவர் திரும்பவும் சிவகங்கை சீமையை அடைந்து கொண்டிருக்கும் வேளையில் ஏதோ சில காரணங்களால் கப்பலில் திடீரென்று இறந்து விட்டாரென்றும் சொல்லிக்கொள்ளப்படுவதில் உண்மை எவ்வளவென்பதைக் கண்டுகொள்ளக்கூடாததாலும் அக்காரணங்களைப்பற்றி நமக்கு திட்டமாகத் தெரியாததாலும் அவைகளை இது சமயம் நிறுத்தி கொண்டோம்.
- இன்று மருதுசகோதரர்களின் நினைவு நாள். அதற்கு இப்பதிவை சமர்ப்பணம் செய்கிறேன்.
அன்பன் - கி.ச. முனிராஜ் வாணாதிராயர்
No comments:
Post a Comment