Monday, March 20, 2017

யார் குற்றப்பரம்பரை?

°யார் குற்றப்பரம்பரை?°
<☆>•<☆>•<☆>•<☆>•<☆>

(அஜீஸ்நகர் ஒரு வரலாறு )
--------------------------------------------
          ஓர் ஊர் ஆரம்பித்து நூறு வருடங்கள் ஆகிறது. அதற்கு ஒரு பிரம்மாண்டமான விழா என்றால் யாருக்கும் அந்த ஊரைப்பார்க்க ஆவல் வரும்! .அப்படியான ஊர் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள "அஜீஸ் நகர்"! இங்கு குற்றப்பரம்பரையினர் என்று பழிவாங்கப்பட்ட 200 குடும்பங்கள் இருக்கின்றன. 100 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இருந்து ஆங்கிலேய கலெக்டர் மார்டின் வின்ஸ்லோவால் மதுரையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள்.

       1911 ஆம் ஆண்டு, மதுரையிலிருந்து கால்நடையாக 400 கி.மீ. அழைத்துச் சென்று அப்போதைய தென்னார்க்காடு மாவட்ட கலெக்டர் அஜீஸ்தீனிடம் மதுரை மாவட்ட வெள்ளையர் விசுவாசி காவலர்கள் ஒப்படைத்தனர். விருத்தாசலம் தாலுகா, கம்மாபுரத்தில் 1377 ஏக்கர் வனத்துறை நிலத்தில் இவர்கள் குடியமர்த்தப்பட்டனர். இது மதுரைப்பகுதியில் இவர்கள் வைத்திருந்த நிலத்தில் பத்தில் ஒரு பங்கு கூட கிடையாது. இவர்களிடம் இருந்து நகைகளையும்,மதுரைக்காவல் உரிமையையும் பெற்றுக்கொண்டு அதற்கு பரிசாக (?) குடிசைவீடுகளை அந்த வனத்தில் கட்டிக்கொடுத்தனர். ஊரைச்சுற்றி முள்வேலி, ஒவ்வொருவருக்கும் சிறிது விவசாய நிலம், இப்படி ஓரிடத்தில் திறந்தவெளி சிறைச்சாலைபோல அடைக்கப்பட்டனர் அம்மக்கள். இவ்வாறு இவர்களின் குடியேற்றப்பகுதிகள் 5இடங்களில் உருவாக்கப்பட்டன. ஆந்திராவில் 2இடங்களும், தமிழகத்தில் ஓட்டேரி, பம்மல், மற்றும் நெய்வேலி அருகில் கம்மாபுரத்திலும் குடியமர்த்தப்பட்டனர்.
தங்கள் சொந்த மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டவர்கள், தங்கள் மண்ணிலேயே அகதிகளைப் போல குடியமர்த்தப்பட்ட ஏழு நகர்களில் 'அஜீஸ்நகரும்' ஒன்று. கம்மாபுரம் குடியிருப்புதான் நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை தொடக்கத்திற்குபின் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள அஜீஸ்நகருக்கு மாற்றப்பட்டது.

     காலங்காலமாக துணிச்சலையும், அடுத்தவர்களுக்கு உதவுதலையும் தலையாய அறமாகக்கொண்ட மதுரைபிரமலைக்கள்ளர்கள். இரவுநேரத்தில் கண்துஞ்சாது அடைக்கலம் கொடுக்கப்பட்ட பொருட்களை பாதுகாத்த காவற்கூட்டம். சேர சோழ பாண்டியர் காலத்தில் உயர்ந்த அந்தஸ்திலும், தான் சார்ந்த அரசனைச்சுற்றி பாதுகாக்கும் தற்கொலைப்படையாகவும் இருந்து வந்த உன்னத சமூகத்தின் நிலை காலச்சக்கரத்தின் சுழற்சியில் தடுமாற்றம் கண்டது.

      யார் இந்த குற்றப்பரம்பரையினர்? அவர்கள் மட்டும் இந்த நாட்டில் என்ன குற்றம் செய்தார்கள்? இந்த மண்ணின் மக்களின் வாழ்வுமுறை அறியாத ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சுமத்திய குற்றப்பரம்பரை என்னும் அடையாளம் ஏன் ஏற்பட்டது? சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த மக்கள் தங்கள் சொந்த சாதி சனங்களை விட்டு ஏன் வாழ்கிறார்கள்? போன்ற கேள்விகள் ஒவ்வொருவருக்குள்ளும் எழுவது இயல்பு.

ஆங்கிலேயரும் மதுரையும் !
~~~~~~~~~~~~~~~~~~~~

    ஆங்கிலேயர்கள் 1800 களில் மதுரைப்பகுதியை தங்களது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தங்கள் சொல்லை ஏன்? எதற்கு?  நியாயம், அநியாயம் என்று சிந்தனை செய்யாத கிளிப்பிள்ளை காவல்துறையை அப்போது பிரிட்டிஷ் அரசு ஏற்படுத்தியது. அதுவரை ஸ்தலக்காவல், தேசக்காவல், பகுதிக்காவல் உரிமைகள் பெற்றிருந்த ஓரினம் தனது பாரம்பரிய கட்டுமானத்தில் விரிசல்கள் கண்டது. 1870 ஆம் ஆண்டு வரையிலும் பிரிட்டிஷ் போலீஸ் துறையால் தீர்க்கமுடியாத குற்றங்களை சில பிரமலைக்கள்ளர்கள் கண்டுபிடித்து கொடுத்தனர். அதற்காக அவர்கள் பெற்றுக் கொண்ட பரிசிற்கு பெயர்தான் துப்புக்கூலி.

    1870 ஆண்டு வாக்கில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அதிகாரம் பெற்று விட்ட நவீன ஏவல் துறை.  (காவல்துறை?)குற்றம் நடந்தால் கண்டுபிடிக்க திணறியது. இதனால் குற்றவாளிகள் அல்லாத நிரபராதிகள் குற்றம் சுமத்தப்பட்டு சிறைகளில் அடைபட்டனர். பின்னர் அவர்கள் குற்றம் புரியவில்லை என விடுவிக்கப்பட்டனர். இப்படி தடுமாறிய நேரத்தில்தான் தமிழர்கள் தங்களது பழங்காலமுறை காவல்தொழிலை திறமையான முறையில் நடத்தி வந்தனர். இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் எரிச்சலுற்றனர். இதனால் பல போலீஸ் சூப்பிரெண்டுகளும், கலெக்டர்களும் பிரமலைக்கள்ளர் சமூகத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டனர்.

      இந்த நேரத்தில்தான் இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் திட்டமிட்டு ஒரு செயலை அரங்கேற்றினர். கோள்சொல்லிகளின் மூலமாக தங்களுக்கு கிடைத்த தகவல்களைவைத்து 1871ல் குற்றப்பரம்பரை சட்டம் என்று ஓர் சட்டத்தை கொண்டுவந்தனர். இதில் 167 இனங்களின் மேல் நடவடிக்கை எடுத்தனர். ஒருங்கிணைந்த இந்தியா, பர்மா,இலங்கை, பகுதிகளில் வாழ்ந்த இந்த இனங்களை "குற்றப்பரம்பரையினர்" என ஆங்கிலேயர்கள் அறிவித்தனர். சட்டத்தை இயற்றிவிட்டு பல ஆண்டுகளுக்கு அமைதிகாத்தனர்.

      1906 ஆம் ஆண்டு மதுரைப்பகுதியில் ஏற்பட்ட சில முக்கியமான களவுகளை கண்டுபிடிக்க முடியாத பிரிட்டிஷ் போலீஸ் கையைப்பிசைந்தது. துப்புக்கூலி கொடுத்து உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்க அவர்களின் அதிகார மமதை இடம்தரவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜி.இ.பாட்ரீஸிடம் பிரமலைக்கள்ளர் பற்றி கோள் மூட்டப்பட்டது. அவர் கலெக்டரிடம் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். என கேட்டுக்கொண்டார்.1871ல் உருவாக்கப்பட்டு 34 ஆண்டுகளாக ரிக்கார்டு தூண்களில் தூங்கிய சட்டப்புத்தகத்தை அன்றைய மதுரை கலெக்டர் மார்டின் வின்ஸ்லோ தூசிதட்டி எடுத்தார்.

        அதுவரை குற்றப்பரம்பரை என்றால் என்ன என்பது தெரியாத காலங்காலமாக பிரமலைக்கள்ளர்கள் சமூகத்தினோடு வாழ்ந்து வந்த, பிராமணர்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள், ஆதிதிராவிடர்கள் போன்ற பிற சாதியினர் பிரமலைக்கள்ளர்களை குற்றப்பரம்பரையினர் என்று சொல்லவில்லை. ஆனால் 200 ஆண்டுகளாக வாணிபம் செய்ய வந்து இந்தியாவைக்கொள்ளையடித்த ஆங்கிலேயர் சில சமூகங்களுக்கு குற்றப்பரம்பரை என பட்டம் கட்டியதுதான் கொடுமை. எந்த விசாரணையும் இன்றி விளக்கமும் இன்றி 250 குடும்பங்கள் திருமங்கலம் தாலுகாவிலிருந்து வெளியேற ஆங்கிலேய கலெக்டர் மார்டின் வின்ஸ்லோ உத்தரவிட்டார்.

         எங்கே போகிறோம் என்று தெரியாது!... பினாங்கா?  அந்தமானா? என்று மருகிய 250 குடும்பங்கள் பச்சிளம் குழந்தைகளோடும்,  தமது குழந்தைகளைப் போல நேசித்த கால்நடைகளோடும், தங்கள் எதிர்காலம் என்னவென்று அறியாமல் கதிகலக்கத்தோடு பிரிட்டிஷ் ஏவல் துறையால் பலத்த பாதுகாப்போடு மதுரையில் இருந்து வடக்கு திசையை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. புறப்படும்முன் பலர் தத்தம் குலதெய்வம் பிடிமண்ணையும், சிலர் குலதெய்வம் சிலையையும், கையில் எடுத்துக்கொண்டனர். ஆனால்  அந்த குலதெய்வம்  மட்டுமே இனி அவர்களுக்கும் மதுரைக்கும் இருக்கும் பந்தம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.அவர்களுக்கு தத்தம் குதிரைகளையோ,  வண்டிகளையோ பயணத்திற்கு பயன்படுத்த ஆங்கிலேயர் அனுமதி மறுத்தனர்.

      தென்னார்க்காடு கலெக்டர் அஜீஸ்தீனிடம் மதுரை கலெக்டர் மார்டின் வின்ஸ்லோ தான் அனுப்பிய குடும்பங்கள் பற்றிய தகவல்களை அளித்தார். அனைத்தையும் இழந்து வறண்டு போய் வந்திருந்த மக்களுக்கு அவர்கள் இனி வாழப்போகும் பகுதியாவது அதிக ஈரமானதாக இருக்கட்டும் என்று நிலத்தினின்று பீறிட்டு வருகிற ஆர்ட்டீசியன் நீரூற்றுகளைக் கொண்ட பகுதியை இம்மக்களுக்கு வாழிடங்களாக அளித்தார், பிரிட்டிஷ் கலெக்டர். அஜீஸ்தீன். ஆங்கிலேய அதிகாரி ஏடன் இவர்களுக்கான பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

       கிறிஸ்தவ பிரிட்டிஷ் மதபோதகர்களால் இவர்களுக்கான கல்வி அளிக்கப்பட்டது. கல்வியுடன் இவர்கள் கட்டாய மதமாற்றத்திற்கும் சிலர் உள்ளாயினர். மதம்மாற மறுத்தவர்களின் நிலை பரிதாபமாக இருந்தது. இந்த நிலை அவர்களுக்கு திருவேங்கடாச்சாரி எனும் பொருப்பாளர் வரும்வரை தொடர்ந்தது. திருவேங்கடாச்சாரி பொறுப்பாளராக பதவியேற்றதும் மதமாற்றத்தை தடுத்து நிறுத்தினார். இது அவர்களை இந்துக்களாக தொடர வழிவகுத்தது. பின்னாளில் இவர்கள் இருக்கும் இடம் நிலக்கரி கொண்ட பெரும் புதையல் என்று கண்டறிந்து அவர்களிடம் அந்நிலம் நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை அமைய கையகப்படுத்தப்பட்டது. இவர்களுக்கான புதிய "அஜீஸ்நகர் " ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது. நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை அமைய நிலம் கொடுத்ததால் இவர்களுக்கு அந்நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. சோகத்திலும் உருவான ஒரே மகிழ்ச்சிகரமான விடயம் இது மட்டுமே.  இன்றைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இம்மக்கள் தமது நூற்றாண்டை கொண்டாடினர். இவர்கள் தமது இருப்பிடங்களில் ஆங்கிலேயர்களால் அனுபவித்த கொடுமைகளை இந்த ஒரே பதிவில் சொல்லிவிட முடியாது.

     இம்மக்கள் தமது செட்டில்மெண்ட் பகுதிகளான மற்ற ஆறுபகுதிகளில் பெண் கொடுக்க எடுக்க செய்கின்றனர். தம் முன்னோர்கள் வாழ்ந்த மதுரை பூமியை மனதிற்குள் நினைத்து புழுங்கிக்கொண்டே மாறாத வடுக்களுடன் வாழ்கிறார்கள்.

No comments:

Post a Comment