"பேராம்பூர் -கத்தலூர் சிற்றரசர்கள்!
♧♢♧♢♧♢♧♢♧♢♧♢♧♢♧♢♧♢♧♢♧
"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமிழ் பன்னிரு நாடென்" ...
என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்கு தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது.
பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியது. இது...
உறையூர் கூற்றம்,
ஒல்லையூர் கூற்றம்,
உறத்தூர் கூற்றம்,
மிழலைக் கூற்றம்,
கானக் கூற்றம் ;
-என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின.
இப்பகுதியில்
1391இல் வடகோநாட்டு நாட்டவர் பேராம்பூர் அரசு என்ற ஆட்சி அலகின் தலைவரான நரசிங்கதேவர்க்கு அரசு சுவந்திரம் என்ற ஆளும் உரிமையினை வழங்கி யுள்ளனர். இதனால் இவ்வாட்சியர் தம் ஆளுகைக்கு உட்பட்ட புறகுடி மக்களிடமிருந்து வரியினைப் பணமாக வசூலிக்கும் அதிகாரத்தினைப் பெற்று உள்ளார். விளிம்புநிலையிலிருந்த புறகுடிமக்கள் வரிசெலுத்த வேண்டியிருக்க உள்குடிமக்கள் பற்றிய குறிப்பு இல்லை
I.P.S.21.புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மகாமண்டபத்தில் கீழை படிக்கட்டில் தெற்கில் உள்ள கல்வெட்டு
“பனையூர் மறவரில் வளத்து வாழ்வித்தான் ஆன தெள்ளியர் உள்ளிட்டாரும்,நரசிங்கத்தேவர்,பஞ்சவராயர்,பல்லவராயர் உள்ளிட்டாரும் வத்தாயரானை "திருமேனியர் அடைக்கலங்காத்தன்" உள்ளிட்டாரும் ஆக இந்ததாலுவகை பேரரையரயர் மேற்படியூர் மறவரில் சோழகோன் ஆன கோனாட்டு பேரரையர் உள்ளிடாரும் ஆவுடையான் ஆன வகைப்பேரும் உள்ளிட்டாரு மோம் நம்மில் இசைந்த பிரமானம் பன்னிக் கொண்டபடி செம்மயிர் விரோதம் இரண்டு வகையில் அழிவில்….உண்டான……..”
நரசிங்கத்தேவன் இந்த பகுதியில் உள்ள ஒரு குறுநிலமன்னன், கத்தலூர் பகுதியை ஆண்ட மறவர் குலத்தை சார்ந்தவன், என விராலிமலை கல்வெட்டு கூறுகின்றது.
-இவர்
”அடைக்கலம் காத்தனான நரசிங்கதேவன்” என நாயக்கர் காலம் வரை ஆண்டுள்ளார்.
மேற்படியூர் மேற்படி கோவில்
மேற்படி மண்டபத்தில் கிழக்கு வரிசை உத்திரத்திலுள்ள கி.பி.13 நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு ....
“இந்த உத்திரம் இவ்வூரில் மறவரில் காத்தரான தெள்ளியர் உள்ளிட்டாரும் "திருமேனியரான நரசிங்க தேவன்" உள்ளிட்டாரும் ஆவுடையார் மூவர் உள்ளிட்டாரும் இளைய திருமேனியரான ஆவுடையார் தன்மம்” என்று கூறுகின்றது.
இவர்களே விராலிமலை சுப்பிரமணியர் கோயில் உருவாக்கத்தில் பங்களிப்பு உடையவர்கள். இக்கோயிலில்
விஜயநகரப் பேரரசரின்
வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கி.பி.1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
நரசிங்க தேவருக்குப்பிறகுவந்த அரசியல் தலைவன் அழகிய மணவாளத்தேவன் அருகில் உள்ள கத்தலூர், பேரம்பூர் ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு ஆண்டுள்ளான். இவனது கட்டுப்பாட்டில் விராலிமலை இருந்துள்ளது.இப்போது கோயில் இருக்கும் இடத்தில் ஒரு காலத்தில் குரா மரம் இருந்தது. வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வந்தான்.அவ்வாறு வரும்போது குரா மரம் இருக்கும் இடத்தில் வேங்கை காணாமற் போய் விடுகிறது. குரா மரம் இருக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பதாக எண்ணி வழிபாடு நடந்திருக்கிறது. வயலூரிலிருந்த அருணகிரிநாதரை, "விராலி மலைக்கு வா' என்று முருகப்பெருமான் அழைக்க அவ்வாறே வந்த அருணகிரிநாதர் குறிப்பிட்ட இடம் தெரியாமல் தவிக்க வேடன் ரூபத்தில் வந்த முருகன் விராலிமலைக்கு வழிசொல்லி அழைத்து சென்று மலையை அடைந்தவுடன் மறைந்து விடுகிறார்.அஷ்டமாசித்தியை அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் வழங்கியதால் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இன்றளவும் கருதப் படுகிறது.திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியுள்ளார் என்பதிலிருந்தே இத்தலம் வெகு சிறப்பு வாய்ந்தது என்று புரிந்து கொள்ளலாம்.
இவ்வரசர்களைக்குறித்த செய்திகளில் இவர்கள் மறவரென்றும் கள்ளரென்றும் குறிப்புகள் காணப்படுகிறது. மேலும் திரு.கரு.ராஜேந்திரன் அவர்கள் இவர்களை " வன்னியப்பட்டமுடையமறவர்" எனச்சொல்கிறார். விராலிமலை கோயிலில் இவருக்கும் பூச்சி நாயக்கருக்கும் சிலை உள்ளது.
No comments:
Post a Comment