Monday, March 20, 2017

மறவர் திருமணச் சடங்கில் குதிரை ஏற்றம்!

மறவர் திருமணச்சடங்கில் குதிரை ஏறல்!
ॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐ

      மறவர் திருமணச்சடங்கில் ஆதிகாலம் தொட்டே குதிரை ஏறுதல் நிகழ்வுகள் காணப்படுகின்றன. இருப்பினும் இன்றுவரை அதை ஒரு பண்பாட்டு தொடர்ச்சியாக " பனையூர்,  குலமங்கலம்,விரையாச்சிலை  மற்றும் ஏழூர் நாட்டு மறவர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

திருமண நிகழ்ச்சிகள்.
•~•~•~•~•~•~•~•~•~•~•
          மணமக்கள் வீட்டார்கள் சம்பந்தம் செய்த பிறகு திருமணத்திற்கு நாள் குறித்தும்,  பரிசம் போட்டும், மாலை ஓலையை அவ்வூர் பெரிய அம்பலக்காரர் மூலமாக பெற்று கோயில் மாலை வாங்கியும், பலவித சடங்குகளோடு அதாவது ....

♧மனையடுப்பு போடல்,

♧முகூர்த்த நெல் அள்ளிப்போடல் ,

♧அல்லி அரசாணி வைத்தல்,

♧சீக்கு கழித்தல்,

♧கங்கணம் கட்டுதல்,

♧மணவறை பொங்கலிடல்,

♧வல்லயம் போடல்,

♧குதிரை ஏறுதல்

♧கோயிலுக்கு வழிபாடு செய்தல்,

♧மிஞ்சி  (மெட்டி) அணிவித்தல்,

♧தாலி கட்டுதல்,

♧மணமிடுதல்,

♧மஞ்சள் நீராடல்,

                     -எனும் சடங்குகளோடு திருமணத்தை நடத்துவர். சங்ககாலத்தில் தமிழர் திருமணங்கள் "சந்திரன்- ரோகிணி" யோடு கூடிய "நல் வேளை"களில் , அதாவது பின்னிரவிலே  ( இரவு- 2மணிக்கு மேல்) நடத்தப்பட்டது. முக்குலத்து மக்களின் பெரும்பாலான திருமணங்கள் ஆதிநாளிலே இவ்வாறாகத்தான் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் " அருந்ததி" பார்க்கும் நிகழ்வு  தமிழரிடையே கடைபிடிக்க பட்டதே காரணம். அருந்ததி கற்புக்குரியவள், அருந்ததி நக்ஷத்திரம் பின்னிரவிலே தெரியக்கூடியது,. அதன் காரணமாக பழந்தமிழர் பின்னிரவிலே திருமணம் நடத்தினர்.

குதிரை ஏறுதல் நிகழ்வு.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

     மணமகனுக்கு "சீக்கா" கழித்தவுடன் புத்தாடை உடுத்தி மாலையணிவித்து குதிரையேறி கோயிலுக்குச் செல்வர். மணமகன் கோயிலுக்கு சென்று தேங்காய் உடைத்து திரும்பும் இடைவெளியில் மணமகளுக்கு சீக்கா கழித்தல் நடைபெறும். தமிழ் நூல்களில் மிகவும் பழமையானது தொல்காப்பியம் என்பர். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் தமிழரின் அகவாழ்வு, புறவாழ்வுக்குரிய வாழ்வியல் கோட்பாடுகள் பல தெளிவுபடுத்தி்பட்டுள்ளன. பொருளதிகாரம் மரபியல் 72 ம் பாட்டு. ...

  "படையும் கொடியுங் குடையும் முரசும்
   நடைநவில் புரவியும் களிறுந்தேரும்
  தாரும் முடியும் நேர்வன பிறவும்
  தெரிவு கொள் செங்கோல் அரசர்க்குரிய "

                  - என்று கூறுகிறது.  தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்களான நச்சினார்க்கினியார், இளம்பூரணார், போன்றவர்கள் மேற்கண்ட பாடலில் வந்துள்ள  "அரசர்க்குரிய" என்ற தொடருக்கு விளக்கம் தரும்போது, . மன்னர்களுக்கு உரியவைகளாக முடி, செங்கோல்,  வெண்கொற்றக்குடை, யாணை, குதிரை, தேர் முதலானவற்றை குறிப்பிடுகிறார்கள்.  இந்த கோட்பாட்டை ஒட்டியே இப்பகுதி மறவர்கள் திருமணத்தின் போது குதிரை ஏறி வந்தனர் எனத்தெரிகிறது.

புதுக்கோட்டை மாவட்டம். திருமயம் வட்டம், குலமங்கலத்திலுள்ள இடிந்த நிலையில் உள்ள சிவன்கோயிலில், அர்த்தமண்டபத்தின் வெளிப்புறச்சுவரிலிருக்கும் கி.பி.12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில். ....

         " குளமங்கல மறவரில் பரியேறு சேவகன் பிள்ளானான "....

                - என்ற சொற்றொடர் காணப்படுகிறது. அதன் பிறகு கி.பி. 15  ஆவது நூற்றாண்டளவில் பனையூர்,  குலமங்கலம் மறவர்களுக்கு சொந்தமான செப்புப்பட்டயங்களில் ஒன்றில்......

    " பனையூர் குளமங்கலத்துக்கு வந்தவன் தெக்ஷிணாபூமிக்கு கர்த்தராகிய சேதுக்காவலப்புரையர் மறமன்னர் வாள்கோட்டைராயர் பரியேறு தேவர் கோடாளிப்புரையர்"

           - எனக் கொண்டுள்ளது! மேற்கண்டவைகளின் மூலம்,  இவர்கள் குதிரை ஏறுதல் நிகழ்வை பழங்காலந்தொட்டு உரிமையாகக்கொண்டிருந்தனர் எனலாம்.

குதிரை ஏறி கோயிலுக்கு சென்று திரும்பிய மணமகனானவன் , வீட்டிற்கு வந்து குதிரையிலிருந்து இறங்கியதும் மணமகளின் சகோதரி மணமகனின் காலை பன்னீர்,  பால், கொண்டு கழுவி, வெள்ளியினால் செய்த மிஞ்சியை அணிவிப்பர்.மெட்டி அணிவிக்கும் பெண்ணின் சகோதரிக்கு "கொழுந்திக்கரை" எனும் சேலை ஒன்று மணமகனால் தரப்படுகிறது. 

இன்னும் பல்வேறு சடங்குகள் இதைத்தொடர்ந்து நடந்தாலும்,  இக்குதிரை ஏறும் நிகழ்வானது தமிழ்ச்சாதிகளிலேயே மறவர்களால் மட்டுமே இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகிறது எனத்தெரிகிறது.  இந்நிகழ்வானது மறவர்கள் மன்னர் வழிவந்தவர்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
      
          நான் இப்பதிவை எழுத எனக்கு எழுந்த சில சந்தேகங்களை தீர்க்க உதவியாக இருந்த. , திரு. மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன்  ( ஓய்வு பெற்ற தலையாசிரியர் மற்றும் தொல்லியல், கல்வெட்டியியல் ஆய்வாளர்) ஐயா அவர்களுக்கும், மற்றும் இத்திருமண நிகழ்ச்சிக்கு சான்றாக எனக்கு புகைப்படங்கள் தந்து உதவிய. "முற்பாடு கொடார்" சூரியத்தேவர்' வம்சாவழியில் வந்த திரு. சாமித்தேவர்,. கோவனூர்.  அவர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

             - நன்றி!  கி.ச.முனிராஜ் வாணாதிராயர்.

                     ----×÷---------×-----------×----------÷×----

1 comment:

  1. கள்ளர் பழக்க வழக்கங்கள்

    ReplyDelete