Thursday, March 23, 2017

பார்க்கவகுலமும் முக்குலத்தோரே!

பார்க்கவ குலமும் முக்குலத்தோர் மக்களும் வெவ்வேறு இனங்களல்ல!  ஒருதாய் மக்களே!

பார்க்கவ குலத்தாருக்கும் கள்ளர்,மறவர் இனத்திற்குமான ஒற்றுமை ஆதாரங்கள்:

கள்ளர்களுக்கும் பார்க்கவகுல சகோதர கூறுகள்:
இன்றைய பார்க்கவ குலத்தவர்கள் தஞ்சை கள்ளர்களின் உட்பிரிவினரே என்று வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றனர்.ஆனால் பார்க்கவர்கள் தனித்தே இயங்கு கின்றனர். பாரி மற்றும் மலையமான்களின் வம்சத்தினராகவே வரலாற்று ஆய்வுகள் இவர்களைக் கூறுகின்றன .தற்காலத்தே இவர்கள் பார்கவ குல மூப்பனார், பார்கவ குல உடையார் என்ற பட்டங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மூப்பனார் என்பது ஜாதிப்பெயர் கிடையாது.இனத்தின் மூத்த குடியினர் எனப்பொருள்படும் .(மைசூர் உடையார்கள் வேறு இனத்தவர்கள்.) உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மூப்பனார்,நயினார்,என்பதாகு தஞ்சைக்.கள்ளர்குல அரசவம்சமாக பழங்காலம் முதலே அறியப்பட்டவர்களான பார்க்கவ குல மூப்பனார்,பார்க்கவ குல உடையார் என்ற சேதிராயர்களான பார்கவ குலத்தினர் மற்றும் தஞ்சைக்கள்ளர்களான சோழர்கள் இருவரைப்பற்றிய கல்வெட்டு இலக்கிய வரலாற்று ஆதாரங்கள் அனைத்துமே சோழர்கள் கள்ளர் மரபினரே என உறுதிப்படுத்துகின்றன. பார்க்கவ குலத்தாரின் பட்டங்கள் தஞ்சை கள்ளரில் சில: 1758 வாணாதிராயர் 762 வாணரையர் 1875 , 1765 வாண்டையார் முனையரையர்,1580 மலையமான் 1581 மலையராயர் ,கொங்கராயர்,சேதிராயன்,535 கிளிநாடர் 683 537 கிளியாண்டார், 390 க686 கத்தரியாளியார் 539 கிளிப்பாண்டார் 2342மிலாடுடையார்,1535 மலாடுடையார்,735 நத்தமான்,347உடையான், 1234சேதியராயன்,432வன்னிய நாயகன்,2342பண்டரையர், 454கோவலராயர்,786வாணகோவரையன்,138வாணராயர்6,வாணவிச்சாதிரன், 454காடவராயன்,(காடவர்களை ஆண்டவன்)612பல்லவராயர்,533அரையதேவன்,1487நாடாழ்வான்

இதைப்போல் பிரான்(மலை) கள்ளர்களும் பாரி மலையமான் இனமே:

தற்போது அழைக்கப்படும் பிரான்மலையை(இம்மலைப்பகுதியில் இருந்து தான் புகழ் பெற்ற பிறமலைக்கள்ளர் என்ற வகுப்பினரும் மதுரை நோக்கி வந்ததாக கூறப்படுகிறது).ஆண்ட பாரி மன்னனுக்கும் மலையமான் திருமுடிக்காரிக்கும் ஏற்பட்டுள்ள மணஉறவு வரலாறு கல்வெட்டில் உறுதி செய்து அறியப்பட்ட ஒரு சம்பவமாகும். வள்ளல் பாரி ஓரியக்குலத்தை சேர்ந்தவன். ஓரியர்=சக்கரவாள சக்கரவர்த்திகள்=நாகவம்சத்தினரின் தலைவர்கள்.பாரிவேள் இந்த வம்சத்தில் வந்தவன்.(உபரிசர வசு என்னும் சோழ மன்னனும் இவ்வம்சத்தவன்). நாகர்கள் என்று அழைக்கப்படும் மரபினரின் தலைவன். (விச்சாதரர்=வானவர்).கள்ளர் என்பார் வீரம் நிறைந்த நாகர்களே என்று கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் 13-ஆம் நூற்றாண்டு சுந்தரப்பாண்டியத்தேவன் கல்வெட்டுகளில் ஒருபாடிக்காப்போன் மழவராயர் என்பவரைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 'மழவர்' என்பது மலைக்கோவலராகியபிரமலைக்கள்ளரைக் குறிக்கும் பெயர் என்பது மீண்டும் இவ்விடத்து நினைத்தற்குரியதாகும். திருமலை நாயக்கர் காலத்திலும் திருப்பரங்குன்றம் கோயிலின் அறங்காவலர் உரிமை 'காரி பின்னத்தேவன்' என்பவருக்கு 'திருமலைக்காரி பின்னத்தேவன் என பட்டம்கட்டி அவருக்கே உரிமையும் செப்புப்பட்டயமும் தரப்பட்டுள்ளது. காரி பின்னத்தேவன் மலையமான் திருமுடிக்காரியின் மரபினரே: எனவே காரி பின்னத்தேவன் என்பவர் திருக்கோவிலூர் மலையமான்.திருமுடிக்காரியின் மரபில் பின் வந்தவன் என்று பொருள் கொள்கிறார்.இவர்களுக்கு முற்காலத்தில் மழவராயர் என்று பட்டம் இருந்துள்ளது.மலையமான்களின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான மலையமான் குலத்தார் மட்டுமே.இன்றைக்கும் சிய்யான்(ஸ்ரீஆயன்) என்ற சொல் வழக்கும் மாயாண்டி,மலைச்சாமி(மலையமான்) போன்ற பெயர்கள் பிரமலைக்கள்ளர் மரபுப் பெயராய்க் காணலாம். இவர்களைத்தான் திருப்பரங்குன்றம் கோயில் கல்வெட்டு மழவராயர் என குறிப்பிடுகின்றது. எனவே பிரமலைக்கள்ளர்கள் திருப்பரங்குன்றம் கோயிலில் பாண்டியனால் பாடிக்காப்போனாக நியமிக்கப்பட்ட 'மழவராயர்' என்ற சீர்மிகு மலையமான் வம்சத்தினரே.

மறவர்களுக்கும் பார்க்கவ மலையமான் குலத்தவருக்குமான இன ஒற்றுமைகள்:

சேதுபதி(செம்பியன்) மன்னர்களும் சிவகங்கை(கௌரி வல்லபர்) மன்னர்களும் பார்க்கவ குலத்தாரைப் போல் உடையார்தேவர் என்று பட்டம் உடையவர்கள் .இந்த பட்டம் எந்த வேறு குலத்தாரிடமும் கிடையாது.பாரி ஆண்ட பிரான்மலையை ஆண்ட அழகன் குமரன் நம்பிராஜன் உடையநயினார்(வீர கேரளன்) பட்டம் உடையவர்.

பண்டாரத்தார்:

பண்டாரத்தார் பட்டம் பார்க்கவ குல உடையாரிடம் உண்டு. சேத்தூர் ஜமீன்-சேவுக பாண்டியத்தேவரும்,கொல்லம்கொண்டான் ஜமீன்-வாண்டாய தேவரும் "வணங்காமுடி பண்டாற மறவர்" என்ற உட்பிரிவை சார்ந்தவர்கள்.

அணஞ்சான்:

பார்க்கவ குலத்தாரிடம் அணஞ்சான் பட்டம் உண்டு: (எ-டு)நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி       இது போன்று
சொக்கம்பட்டி ஜமீன் - "செம்புலி" சின்ன அணைஞ்சா தேவர் என்ற பட்டம் உடையவர்.

மறவர்குலத்தவரான அழகு முத்து சேர்வையின் முன்னோராக "உத்தம சோழ கோன் மிலாடுடையார்" என்ற பட்டம் உடையவர். தம் முன்னோரின் பட்டமான சோழ கோன் தான் அழகு முத்து கோனாக மருவியுள்ளது. பார்க்கவ குலத்தில் உத்தம சோழ மிலாடுடையான் என்ற மன்னர் இருந்துள்ளார்.

கொண்டையம் கோட்டை மறவரின் வெட்டுவான்,சேதியர் கிளைகள் சேதியராயரை குறிக்கும். பார்க்கவ குல கத்திக்காரர்கள் வாள்வீமன் கிளையை சார்ந்தவர்கள்.

திருமுடிக்காரியின் நாணயத்தில் பச்சைக் குதிரை முத்திரை உண்டு.சிவகிரி ஜமீனின் சின்னம் குதிரையாகும். மலையமான் வம்சத்தவரிடம் வன்னியநாயகன்,வன்னியர் பட்டம் உண்டு.இது போல் சிவகிரி வன்னிய மறவர்களுக்கு வன்னியர் பட்டம் உண்டு.

இதையெல்லாம் விட மலையமானை சங்க இலக்கியத்தில் "மறப்போர் மலையன்" என்றும் "கூர்வேல் மலையன்","ஒரிவாள் மலையர்" என்றும் கூறுவர்.இது மறவர்களை"நீலக் கச்சைப் பூவார் ஆடைப், பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து ; இனியே, தன்னும் துரக்குவன் போலும்-ஒன்னலர் எ·குடை வலத்தர் மாவொடு பரத்தரக்(புறம்)" ஆதாவது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்தது கிடையாது என்று கூறுவர்.

இதையெல்லாம் விட மலையமானை திருக்கோவிலூர் சித்தலிங்கமடம் "உத்தம சோழன்" கல்வெட்டில்"சூரியன் மறவனான மலையகுலராஜன்" என கூறியுள்ளது.

ஆதாரம்:
சதிரன் மறவனான ராசேந்திர சோழ மலையமான், சூரியன் சாவன சகாயனான மலையகுலராசன்,
சூரியன் மறவனான மலையகுலராசன்,
சூரியன் பிரமன சகாயனான மலையகுலராசன்,
About 4 records of this volume assigned to Uttamachola have been published in S. I. I., Volume III (Nos. 130, 147, 151 and 151-A). About 22 inscriptions in this collection are assignable to Rajaraja I. No. 412 from Siddhalingamadam dated in the 4th year records a gift made by Maladudaiyan . . . . . . It is not impossible that this Sadiran alias Rajendrasola Malaiyaman is identical with a chief of the same name on whose behalfMalaiyaman Suriyan [Ma]ravan Suriyan alias Malaiyakula-rajaan of Kiliyurincluded in the same division is stated to have made a gift of 192 cows for two perpetual lamps, to god Tiruvidaikalivalvar of Tirukkovalur in Kurukkaik-kurram in Jananatha-valanadu. It appears as though these two chief were brothers, the former being elder of the two on whose behalf the gift was made, and it might not be wrong to suggest that this chief was a father of Sadiran Suriyan [Ma]ravan Suriyan alias Malaiyakularajan (S.I.I., Vol. VII, No. 133).

எனவே நாம் மேலே குறிப்பிட்ட கள்ளர்,மறவர்,பார்க்கவகுல உடையார்கள் இவர்கள் யாவரும் இம் மண்ணையாண்ட சேர,சோழ,பாண்டியர் என்னும் மன்னாதி மன்னர் வழி வந்த போர்க்குலத்தவர்களான வீரமரபினரேயாகும்.பார்க்கவ குலத்தார்கள்,கள்ளர்,மறவர்,அகமுடையர் இவர் யாவரும் ஆதி மறக்குடிகளே!!!!

Wednesday, March 22, 2017

வலங்கைப்புலி வெள்ளையத்தேவன்

"வலங்கைப்புலி வெள்ளையத்தேவன் "
+×+×+×+×+×+×+×+×+×+×+×+×+×+×+×+×+
      
             ஆங்கிலேயர்கள் மதராஸ் ரெகுலேஷன் 2 (1819) என ஓர் சட்டத்தை கொண்டு வந்தனர்! இச்சட்டத்தின் மூலமாக எவரையும் அரசியல் கைதி என அரெஸ்ட் செய்யலாம். பின்னர் நாடும் கடத்தலாம். இச்சட்டம் பாளையக்காரர் மேலும் பிரயோகிக்கப்பட்டது. அதை தீரமுடன் எதிர்த்து உரிமைக்குரல் எழுப்பியவர்தான் "சொக்கம்பட்டி" எனும் வடகரைப்பாளையக்கார் திரு. "வலங்கைப்புலி வெள்ளையத்தேவன்" அவர்கள்.

சொக்கம்பட்டி பாளையம்
--------------------------------------------
                    சொக்கம்பட்டி பாளையப்பட்டானது முன்பு 18 முக்கியமான கிராமங்களையும் அதில் பல குக்கிராமங்களையும் கொண்டு விளங்கியது. அவை
1.டி.என்.புதுக்குடி எனும் திருமலைநாயக்கன் புதுக்குடி.
2.திருவேட்டநல்லூர்
3.வீரிருப்பு
4.குலசேகரமங்கலம்
5.வெள்ளாளங்குளம்
6.ஈச்சந்தா
7.சொக்கம்பட்டி
8.வைரவன் குளம்
9.கம்பனேரி
10.புதுக்குடி
11. ஊர்மேனியழகியான்
12.குன்னக்குடி
13.வல்லம்
14.சில்லரைப்புலவு
15.சிவன் ஆதனூர்
16.மின்னடிச்சேரி
17.குலையநேரி
18.ஆனைக்குளம்
        என்பனவாகும். - இதனை வழி வழியாக கொண்டையன்கோட்டை மறக்குலத்தலைவர்கள் ஆண்டுவந்தனர். மதுரையை ஆண்ட பாண்டியர்களின் கீழ் சிற்றரசர்களாக முதலில் இவர்கள் இருந்தனர். பிற்காலப்பாண்டியன் அழகன்பெருமாள்குலசேகரத்தேவர் காலத்திற்கும்  (கி.பி.1430 ) வீரபாண்டியத்தேவர் (கி.பி.1475 ) காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர்கள் 'மும்முலாப்பட்டி, முருகப்பட்டி ' ஆகிய கிராமங்களை உள்ளடங்கிய பகுதிகளில் தென்காசி பாண்டியரின் சிற்றரசுபீடத்தின் எல்லைகளைக்காக்கும் காவல்தலைவர்களாக இருந்தனர். இதன் காலம் கிபி.1458 என்பர்.  இப்பாளையமானது பழைய ஏடுகளில் "தென்னேரி நாடு" என தொல்பொருள் சான்றுகள் சொல்கின்றன. இவர்களின் ஆட்சி எல்லை தென்காசி பகுதி முழுவதும் உள்ளடக்கியது.என்று 1755 ம்ஆண்டு "கன்ட்ரி கரஸ்பாண்டென்ஸ்" ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'சொக்கம்பட்டி ' என பிற்காலத்தில் அழைக்கப்பட்ட இப் பாளையத்தின் தலைவர்களின் பூர்வீகம் மேற்சொன்ன மும்முல்லாப்பட்டி -முருகப்பட்டி என்ற ஊர்களேயாம்.

மரபினர் வழி!
-----------------------
         பாண்டியர்களுக்கெதிரான கலகத்தை அடக்கியதன் பொருட்டு பஞ்ச பாண்டியர் என அப்பகுதியில் அழைக்கப்பட்டு வந்த 5 சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு பரிசாக அருணாப்பட்டி, பெருமாள் பட்டி,ராமகிருஷ்ணாபட்டி, சொக்கம்பட்டி ஆகிய ஊர்களை மானியமாக அளித்தான். இவர்களின் வடகரைப்பாளையமே பிற்காலத்தில் சொக்கம்பட்டி பாளையமாகி இதன் தலைமையிடமானது.
அந்த ஐந்து சகோதரர்கள். ...
1.சின்னணஞ்சித்தேவன்
2.பெரியணஞ்சித்தேவன்
3.முத்தணைஞ்சித்தேவன்
4.பூவணைஞ்சித்தேவன்
5.நல்லணைஞ்சித்தேவன்
        இவர்கள் நிர்வாக வசதிக்காக தங்கள் பாளையத்தின் தலைநகரை சொக்கம்பட்டி க்கு மாற்றிக்கொண்டனர் .இந்த மாற்றம் 1767ஐ ஒட்டி நடந்ததாக கால்டுவெல் தமது திருநெல்வேலி சரித்திரத்தில் குறிப்பிடுகிறார்.
கலகக்கூட்டத்தை அடக்கி காவல் பணி ஏற்றது கி.பி.1391 என்றும் சொல்வார்கள். அப்போது பாண்டியர் தளபதியாக இருந்தவன் 'செம்புலி சின்னணைஞ்சித்தேவன் ' இவனது காலம் கிபி. 1391 -1434 வரையாகும். இவர்களின் வம்சாவழியினர் பட்டியல் கீழே.......
வடகரை ஆதிக்கம் / பாளையப்பட்டு
---------------------------------வம்சாவளி ! ------------------------------------------------------------- 
   1.செம்புலி சின்னணைஞ்சாத்தேவன் (1391-1434)
   2.முத்தணைஞ்சாத்தேவன்(தம்பி ) (1434 -1461 )
   3. காளத்தியப்பத்தேவன் (மகன் ) (1462 -1490 )
   4.அதிவீர ராமத்தேவன்  (மகன் ) (1490-1515 )
  5.வல்லராயத்தேவன்  (மகன் ) (1516 -1522 )
   6.திரிகூடராஜ கோபாலத்தேவன் (1536 -1595 )
       இவருடைய தாயாதி  (தாயாதி -பங்காளி ) பெரியணஞ்சாத்தேவர் இப்பாளையத்தின் தளகர்த்தர்களில் ஒருவராக இருந்தார். இக்காலகட்டத்தில் விஜயநகர அரசு பாண்டியர்களுக்கு மேல் கொலுவீற்றியிருந்தது. அப்போது சேரரும் ( திருவிதாங்கூர் படைகள் ) சோழரும் பாண்டியநாட்டின் மேல் படையெடுத்தனர். இப்போருக்கு இவரின் தலைமையிலான படைகள் மதுரைக்கு சென்றது. 8 ஆண்டுகளுக்கு போர் நடந்தது. போரில் அனைத்து படையினரும் மாண்டனர். இவர் மட்டும் வடகரைக்குத்திரும்பினார்.

    7.பெரியணைஞ்சாத்தேவன் குமாரமுத்து சின்னணைஞ்சாத்தேவர் (1602 -1629) (மகன் )
   8. சிவனடியாத்தேவன்  (1630 -1659) (மகன்)
    9. பெரியசாமியாத்தேவன்  (பெரிய பட்டம் ) (1670-1721 )
                              
(இவர் காலத்தில் மதுரையை ஆண்ட திருமலைநாயக்கரும் தளவாய் ராமப்பையனும் குற்றாலம் கோயிலுக்கு விஜயம் செய்து பட்டங்கள் வழங்கி பரிசில்கள் வழங்கினர்.)
   
இவரின் தம்பி ராசகோபாலத்தேவன்  (சின்னப்பட்டம் ) இவருக்கு 7 குழந்தைகள் அவர்களில் மூத்தவரான வாரிசு. ...
10. திருமலைக்குமார சின்னணைஞ்சாத்தேவன் (1722 -1728 )
11. சிவராம சின்னணைஞ்சாத்தேவன்  (எழுவரில் இரண்டாமவர்-தம்பி)1729-1731.
12. மாப்பிள்ளை பெரியசாமியாத்தேவன்  (1731 -1741 )
இவர் 9வது பட்டம் பெற்றவரின் மகளான பூவாத்தாள் நாச்சியாரின் கணவர். இவர் இறந்த போது பூவாத்தாள் நாச்சியார் உடன்கட்டை ஏறித்தீக்குளித்து மாண்டார்.
13.காளத்தியப்பத்தேவன்  (1741 -1743 )
14.சின்னணைஞ்சாத்தேவன்  (1744 -1749)
(இவர் 9வது பட்டம் எய்திய போது இதில் 11வது பட்டமெய்திய சிவராம சின்னணைஞ்சாத்தேவரது மகனுக்கும் பட்டம் கட்டினார்கள் -இதனால் கலகமும் இரண்டு ஆதிக்கங்களும் ஒரே பாளையப்பட்டில் உருவாயின )
15. குமார சின்னணைஞ்சாத்தேவன் (1750 -1760 )
இதன்பின்னர் 1760 -1767 வரை கான்சாகிப் மற்றும் கர்நாடக நவாப் ஆட்சியின் கீழ் அவர்களின்ஏஜெண்ட்களின் கையில் பாளையம் வீழ்ந்தது. 1764 ல் குமாரசின்னணைஞ்சாத்தேவர் இறந்தார்.
16. செம்புலி சின்னணைஞ்சாத்தேவன்  (மகன் ) (1767 -1782 )
     மேற்குறித்த செம்புலியையும் அவரது வழியினை வேறு படுத்தும் வாயிலாக பிற்காலத்தில்  (3.11.1795ல்) வலங்கைப்புலி வெள்ளையத்தேவன் எனப்பட்டவர் வெள்ளையர் அரசுக்கு இந்தப் பாளையத்தின் வாரிசுதாமே என அறிவித்து,  அதற்குச்சான்றாக தம் மூதாதையர் குறித்த அறிக்கை ஒன்றையும் அளித்தார். அதற்கான வாரிசுரிமைப்பட்டியலையும் சமர்ப்பித்த அவர், மதுரைபாண்டியர் காலம் முதலே தங்கள் மூதாதையர் சொக்கம்பட்டியை
ஆண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சின்னணைஞ்சித்தேவன் முதலானோர் தமது மூதாதையர் வழியில் முறையின்றி வந்தவர்கள் என்றும் கூறியுள்ளார். சொக்கம்பட்டி ஐ மைனர்கள் பொறுப்பில் இருந்த போது மேற்படியினர் பாளையத்தை கவர்ந்து கொண்டனரென்றும் தெரிவிக்கிறார்.

                  இந்த பரம்பரையில் வந்த வலங்கைப்புலிவெள்ளையத்தேவனே மதராஸ் ரெகுலேஷன் சட்டத்தை எதிர்த்தவர் ஆவார். .....

    இவரின் வம்சாவழியினர் பற்றியும் அறிந்து கொள்வது வரலாற்று அவசியமாகும்.
1. பாண்டியன் பகதூர் வெள்ளையத்தேவன்.
(இந்த நாட்களில் கர்நாடக நவாப்பிடம் தென்னகம் வீழ்கிறது. நவாப்பின் ஏஜெண்டான முஹம்மது இட்பர்கிகான் பாண்டியன் பஹதூர் வெள்ளையத்தேவனை நீக்கிவிட்டு செம்புலி சின்னணைஞ்சாத்தேவனை நியமிக்கிறான்.

2.பெரியசாமி செம்புலி சின்னணைஞ்சாத்தேவன் (1787-1790 )
3.குமார சின்னணைஞ்சாத்தேவன்  (மகன் ) 1790 -1796.
     இதனிடையே நெல்லைக்கு புதிய கலெக்டராக ஜார்ஜ் பௌனி வருகிறான்.இவன் வெள்ளையத்தேவருக்கு மீண்டும் ஜமீன் பொறுப்பை அளிக்கிறான்.
4. வலங்கைப்புலி வெள்ளையத்தேவன்  (முதல் ஜமீன்தார் மகன் )1796 -1835.
        இவரே தமது பாளையத்திற்கு தீர்வு கட்டமுடியாமல் தம் பாளையத்தை இழக்கிறார். அரசியல் கைதியாக பெல்லாரி குத்தி சிறையில்(1835-1837) அடைபட்டு பின்னர் விடுவிக்கப்பெறுகிறார்.
  இடையில் 1836-முதல்- 1858 வரையில்  ஆங்கிலேய காலனி ஆட்சி.

5.கருணாலய வலங்கைப்புலி்தேவன். (4-வது பட்டமெய்தியவரின் மகன் ) 1859-1863.

வடகரையா? சொக்கம்பட்டியா?
----'----------------'---''''-----'''----'''---''''---'''--
     வடகரையும் சொக்கம்பட்டியும் வேறு வேறு ஊர்களானாலும் வடகரை சொக்கம்பட்டியாரின் மிக முக்கியமான பாசறை ஆகும். சொக்கப்பட்டியாரை "வடகரையார் ஆதிக்கம்" என்றே வழக்கு மொழியில் சொல்வார்கள்.

             நாளை தொடருவோம்! ....

வடகரைப் பாளையக்காரர்களின் நற்பணிகள்!

நெல்லைச்சீமையில் புகழ்பெற்ற வடகரைப்பாளையம் என்ற சொக்கம்பட்டி ஜமீன்.

தென்காசிப்பாண்டியர்கள் திருநெல்வேலிப் பகுதியை ஆண்டு வந்தனர். தென்காசி பகுதியை சடையவர்மன்  பராக்கிரமபாண்டியன் ஆட்சி செய்த காலத்தில் ஆப்பநாடு கிழுவைநாட்டிலிருந்து வந்த மறவர்குல தலைவர்களுக்கு சில பகுதிகளை கொடுத்து ஆட்சியில் அமர்த்தினார் .

வடகரையில் முதல்பட்டமாக வாழ்ந்தவர், செம்புலி சின்னணைஞ்சாத்தேவர் .இவர் கிபி 1391முதல்  1434 வரை ஆட்சி செய்தார்.
இவர் காலத்தில்தான் குற்றாலம் கோவில் அன்னசத்திரம்கட்டப்பட்டது.                                                
இரண்டாவது பட்டமாக வீரபாண்டிய ராஜா 1434 முதல் 1461வரை ஆட்சி செய்தார் .குற்றாலம் சிவன் கோயிலில் குழல்வாய்மொழி அம்மன் முன்பு தரையை சரிசெய்துமேம்படுத்தினார் .                                 
மூன்றாம் பட்டமாக காளத்தியப்பத்தேவர் 1462 முதல் 1490 வரை ஆட்சி செய்தார் .இவர் பண்பொழி முருகன் கோவிலுக்கு தேர் அம்மன் தேர் விநாயகர் முருகனுக்கு தேர் செய்ய பொன் பொருளை வழங்கியுள்ளார் .செங்கோட்டை வழியாக பண்பொழிக்குசெல்லபாலம்கட்டியுள்ளார் .                           
நான்காம் பட்டமாக அவர் மகன் அதிவீரராமத்தேவர் 1490 முதல் 1515 வரையில் ஆட்சி செய்து வடகரை ஈஸ்வரன் கோவிலுக்கும் கன்னிமூலைக்கோட்டைக்கும் திருப்பணி செய்தார் .                             

ஐந்தாவதாக வல்லவராயத்தேவர் 1516 முதல் 1522வரைஆட்சிசெய்தார் .                                                   
ஆறாவது பட்டமாக 1536 முதல் 1595 குலசேகர ராஜா ஆண்டு வந்தார். குற்றாலம் சிவன் கோவிலின் குறைவேலைகளை கட்டி முடித்தார் .கண்டிக்கோட்டையையும் சொக்கம்பட்டி கோட்டையையும் கட்டி முடித்தார் .

இவருக்கு வாரிசு இல்லாததால் வடகரை மூலக்கோட்டையை சேர்ந்த குமார முத்து சின்னணைஞ்சாத்தேவர் ஏழாவது பட்டமாக ஆட்சிக்கு வந்தார் இவர் காலத்தில் குற்றாலநாதர் தீர்த்த மண்டபம் சுற்றுப்பிரகாரம்கட்டப்பட்டது.                                                       
எட்டாவது சிவனடியார் தேவர் ஆட்சி செய்திருக்கின்றனர்.

ஒன்பதாவதாக பெரிய பட்டம் பெரியசாமித்தேவர். சின்னப்பட்டம் சிவராம சின்னணைஞ்சாத்தேவர் காலத்தில்தான் திருக்குற்றாலம் சித்திர சபைக்கு செப்பேடு பதித்து கும்பாபிஷேகம் செய்தார். மேலும் தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் வழியிலுள்ள யானைப்பாலம் திருநெல்வேலி பாதையிலுள்ள இரும்புத்தண்டு பாலங்களை கட்டியதும் சொக்கம்பட்டி ஜமீன்தான் .    

திருக்குற்றாலக் குறவஞ்சி எழுதிய புலவர் திரிகூடராசப்பக்கவிராயர் இந்த ஜமீன் புலவராக இருந்துள்ளார் .               

"ஆலயஞ் சூழ்த் திருப்பணியுங்கட்டி
அன்ன சத்திரங்கட்டியப்பாலுந் -தென்காசிப் பாலமுங்கட்டிப் படித்தரஞ் சேர்கட்டிப் பக்தசனங்களைக் காக்க துசங்கட்டி மாலயன் போற்றிய குற்றாலநாதர் வழித்தொண்டு செய்திடக்கச்சை கட்டிக்கொண்ட சீலன் கிழுவையிற் சின்னணைஞ் சேர்ந்தான் சிறுகால சந்தித் திருத்துப்புறவெல்லாம் " 
-என்ற அவர் பாடலில் பாடியுள்ளார் . 

சொக்கம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஊர். அதனால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும் போவதுமாக இருந்துள்ளது .
இதே போல ஒரு புலி அட்டகாசம் செய்து வந்ததைகண்ட ஜமீன் சின்னணைஞ்சி சிவத்தபாண்டியன் புலியை அடித்து கொன்றார் .அதை புலவர் இவ்வாறாக பாடுகிறார் .                       

"தம்புலியான மடப்புலியே !                        தடிக்கம்பால் அடிபட்டாயே !                        எங்கள் முப்புலி துரைப்புலி வீரப்புலி கொண்ட புலி கருணாலய வலங்கைப்புலியால் கைக்கம்பால் அடிபட்டு இறந்தாயே "

என்று புகழ்ந்து பாடியுள்ளார் .                            

சுதந்திர போராட்டத்தில் சொக்கம்பட்டி பாளையத்திற்கு சிறப்பான இடமுண்டு .1729 ல் ஆட்சி செய்த சின்னணைஞ்சி செவத்த பாண்டியன், 156 கிராமங்களை ஆட்சி செய்தார் இவர் வெள்ளையரை எதிர்த்து நெல்கட்டாஞ்செவல் பாளையக்காரர் பூலித்தேவருடன் இணைந்து போரிட்டார் .பூலித்தேவர் பாளையத்தை போலவே சொக்கம்பட்டி பாளையமும் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டது .1801ம் ஆண்டு மருதுபாண்டியர்களின் தென்னிந்திய கிளர்ச்சியிலும் பங்கு கொண்டு சுதந்திரப்போருக்கு தியாகம் செய்தனர்

ஜமீனின் கடைசி வாரிசான கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் பொருளாதார நெருக்கடியில் சிக்கி நோய்வாய்பட்டு குற்றாலம் பங்களாவில் இறந்தார் .......

....நன்றி! .. "இசக்கி முத்து"

தொல்லியல் நோக்கில் சங்ககாலம்!

தொல்லியல் நோக்கில் சங்ககாலம்
''''''""""""""""""""""""""""""""""""""""""""""""""

தொல்லியல் ஆய்வு
தொல்லியலை Archaeology எனக்கூறுவர். 'ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்' என்பது இதன் பொருளாகும். தொல்லியல் ஆய்வு என்பது பூமிக்குள் புதையுண்டு மறைந்து கிடக்கும், அல்லது மேற்பரப்பிலே காணப்படும் மனித இனத்தோடு தொடர்புடைய பொருள்களையும், அவர்கள் நாள்தோறும் வாழ்க்கையில் பயன்படுத்தி விட்டுச்சென்ற பொருள்களையும் அகழ்ந்தெடுத்து ஆய்வுசெய்து அவர்களின் பழம்பண்பாடுகளைப் பற்றி உய்த்தறியும் ஓர் ஆய்வாகும்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் எடுத்த அரிய பல தொல்பொருட்கள் C14 எனப்படும் கரிப்பகுப்பாய்வு மூலம் அறிவியல் முறைப்படி காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் அவற்றின் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வுகளில் சங்க இலக்கியங்களோடு தொடர்புடைய பல பெயர்கள் - பொருள்கள் கிடைத்துள்ளன. எனவே அந்தத் தொல்லியல் அகழாய்வுக் காலத்தைச் சங்ககாலம் என்று கொள்ளுவது தவறாகாது.

சங்ககால ஊர்கள்

சங்க இலக்கியம் குறிக்கும் தொன்மையான சில ஊர்களில் முறைப்படி அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றின் மூலம் அவ்வூர்கள் இருந்தமையும், அங்கு மக்கள் வாழ்ந்தமையும் அகழாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அகழாய்வு நடைபெற்ற ஊர்கள் - அதன் சங்ககாலப் பெயர்

அரிக்கமேடு (வீராம்பட்டிணம்) - வீரை முன்துறை (அகம் 206)
அழகன்குளம் - மருங்கூர்ப்பட்டினம் (நற் 258)
உறையூர் - உறந்தை (புறம் 39)
கரூர் - கருவூர், வஞ்சி (புறம் 13,11)
காஞ்சிபுரம் - கச்சி (பெரும் 420)
காவிரிப்பூம்பட்டினம் - புகார் (பட்டின 173)
கொடுமணல் - கொடுமணம் (பதிற் 74)
கொற்கை - கொற்கை (அகம் 27)
தருமபுரி - தகடூர் (பதிற் 78)
திருக்கோவிலூர் - கோவல் (அகம் 35)
திருத்தங்கல் - தங்கால் (நற் 386)
மதுரை - மதுரை (பரி 11)
வல்லம் - வல்லம் (அகம் 336)
கொடுங்கலூர் - முசிறி (புறம் 343)

மைய அரசு, தமிழக அரசு, சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த தொல்லியல் துறைகள் இவ்வூர்களில் அகழாய்வை மேற்கொண்டன. அரிக்கமேட்டில் அமெரிக்கத் தொல்லியல் துறையினரும் அகழாய்வில் ஈடுபட்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னர் மேற்கண்ட ஊர்கள் சிறந்த நாகரிகத்துடன் விளங்கின என்பது அகழாய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வூர்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் சங்ககாலச் சிறப்பும் தொன்மையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பெருங்கற்படை

சங்ககாலத்திற்கு இணையான தமிழகத் தொல்லியல் ஆய்வில் மிகவும் சிறப்பாகக் குறிக்கப்பெறும் தன்மையுடையது பெருங்கற்படைச் சின்னங்களின் அகழாய்வாகும். தமிழகமெங்கும் பரவலாகவும். மிகுதியாகவும் காணப்பெறுவது இச்சின்னங்களேயாகும். இதனைத் தொல்லியலார் Megalithic என அழைப்பர். இக்கால ஈமக் குழிகள் மிகப் பெரிய கற்பலகைகளைக் கொண்டும், பெரிய கற்களைக் கொண்டும் அமைக்கப்பட்ட காரணத்தால் இதனைப் பெருங்கற்படைப் பண்பாடு என அழைப்பர். கல்அறை, கல்வட்டம், கல்படை, கல்குவை, கல்திட்டை, கற்கிடை எனப் பலவாறாக இவை காணப்படும். பெருங்கற்படைப் பண்பாடு 2500 ஆண்டுகட்கு முற்பட்ட பண்பாடாகும்.

பெருங்கற்படைச் சின்னங்களைச் சங்க இலக்கியங்கள் 'பதுக்கை' எனக் குறிப்பிடுகின்றன.
'செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை' (புறம் 3)
'வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர்
எண்ணுவரம்பு அறியா உவல்இடு பதுக்கை' (அகம் 109)
'இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை' (கலி 12)

என்பன 2500 ஆண்டுகட்டு முற்பட்ட பெருங்கற்படையைக் குறிக்கும் சங்க இலக்கியத் தொடர்கள். பூமிக்குள் பதுங்கியிருப்பது, பதுக்கப்பட்டிருப்பது பதுக்கை ஆயிற்று. இவை வீரம்காட்டி மாய்ந்த வீரர்கட்குப் புதிதாக எடுக்கப்பட்டது என்பதை 'வம்பப்பதுக்கை' என்பதன் மூலம் அறியலாம். வீரயுகமான சங்ககாலத்தில் பெரும்பாலும் வீரர்கட்கென்றே பெருங்கற்படைகள் அமைக்கப்பட்டன.

நெடுங்கல்

பெருங்கற்படைச் சின்னங்களான இப்பதுக்கைகளை அமைத்தபின்னர் அதன் அருகே நீண்டு உயர்ந்த குத்துக்கல்லை அடையாளமாக அமைத்தனர். இதனைத் தொல்லியலார் Menhir என அழைப்பர். இவை ஒன்றோ இரண்டோ பெருங்கற்படையின் அருகே இருக்கும்.

இதனைப் புறநானூறு 'பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி
இனி நட்டனரே கல்லும்'
என்று கூறும் (264). அகநானூற்றில் இவை
'சிலை ஏறட்ட கணைவீழ் வம்பலர்
உயர்பதுக்கு இவர்ந்த அதர்கொடி அதிரல்
நெடுநிலைநடுகல்' என்றும்.
'பிடிமடித் தன்ன குறும்பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்'
என்றும் குறிக்கப்படுகின்றன (289, 269).

இந்நெடுநிலைக் கற்களே பிற்காலத்தில் நடுகற்களாக (Hero Stones) மாறின என்பர்.

நடுகல்

Hero Stones (வீரன்கல் - வீரக்கல்) என வழங்கிய கற்கள் இப்பொடுது Memorial Stones (நினைவுக் கற்கள்) என வழங்கப்படுகின்றன.


வரலாற்றின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் பழங்குடி மக்களின் பண்பாட்டை விளக்க நடுகற்களே காரணமாக அமைந்துள்ளன. மறவர், எயினர், மழவர், வேடர், கோவலர், வடுகர், கள்வர், பறையர், பாணர் ஆகிய குடிகளைச் சேர்ந்த சேவகன், இளமக்கள், இளையோர், ஆள், இளமகன், அடியாள், அடியார், மன்றாடி, தொறுவாளன் ஆகியோருக்கே பெரும்பாலும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கிருந்து உயிர்நீத்த கோப்பெருஞ்சோழனுக்கும், போரில் வீரமரணம் அடைந்த அதியமானுக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது (புறம் 221,223,232). பிற்காலத்தில் இவை பள்ளிப்படையாக மாறியது. பெரும்பாலும் வீரர்களுக்கே நடுகல் நாட்டப்பட்டது. குறிப்பாக போருக்கு முதற்காரணமாக அமையும் ஆநிரைகவரும் வெட்சித்திணைக்கும், கவர்ந்த ஆநிரைகளை மீட்கும் கரந்தைத் திணைக்கும் உரிய நடுகற்களே மிகுதியாகும். கல் என்றாலே நடுகல்லையே குறிக்கும் பழக்கம் இருந்தது. 'விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர்
நன்னிலை பொறித்த கல்' (அகம் 179)
'என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்ஐ
முன்நின்று கல்நின் றவர்' (குறள் 771)

இவ்விடங்களில் நடுகல் கல் என வழங்கப்பட்டுளமையைக் காணுகிறோம். (கல் நடுவித்தார் மதியுளி - தருமபுரி நடுகல் கல்வெட்டு). ஒரு காலத்தில் நடுகல்லை மட்டுமே தெய்வமாக வணங்கியுள்ளனர். 'ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பில் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே' (புறம் 335)

என்பது மாங்குடிகிழார் பாடலாகும்.

இறந்த வீரனின் பெயரையும் பெருமையையும் கல்லில் பொறிப்பர் நடுகல்லுக்கு நீராட்டி நெய்பெய்து வாசனைப்புகை காட்டுவர். விளக்கேற்றுவர். பூக்களைச் சொரிவர். மாலை சூட்டுவர். மயிற்பீலி சாத்துவர். காப்புநூல் கட்டுவர். ஆட்டுக்கிடாய்களைப் பலியிடுவர். துடி, மணி ஒலிப்பர். எண்ணெய் பூசுவர். சிறு கலங்களில் கள் படைப்பர். துணிப்பந்தல் அமைப்பர். வில், வேல், வாளால் வேலி அமைப்பர். பெரும்பாலும் வழிகளில் நடுகல்லை நட்டனர். ஆழமாக நட்டனர். நடுகல்லை ஆள் என ஒரு யானை உதைத்தது. நடுகல் சாயவில்லை, யானையின் கால் நகம் உடைந்ததாம். போர்க்களத்தில் விழுப்புண் பட்டோர் நடுகல் அருகே வந்து புண்ணைக் கிழித்து உயிர் விடுவர். நடுகல்லை வணங்கினால் மழைவரும், அரசன் வெற்றி பெறுவான், பயிர் செழிக்கும், கால்நடை பெருகும், வீட்டுக்கு விருந்தினர் வருவர் என நம்பினர்.

தாழிகள்

தொல்லியல் ஆய்வில் மிகவும் சிறப்பிடம் பெறுவது தாழிகள் ஆகும் (Urns). தமிழ்நாட்டில் இவை பல வகைகளாகக் காணப்படுகின்றன. இவை கூர்முனைத் தாழிகள், கால்கள் உடைய தாழிகள், விலங்குருவத் தாழிகள் எனப் பலவகைப்படும்.

சங்க இலக்கியங்களில் இவை கலம், தாழி, கவிசெந்தாழி, ஈமத்தாழி, தாழியபெருங்காடு. முதுமக்கள் தாழி, மன்னர் மறைத்த தாழி எனப்பலவாறு அழைக்கப்பெறுகின்றன (அகம் 129, புறம் 228, 236, 256, 364, பதிற் 44). தாழிப்புதையல் 2500 ஆண்டுகட்கு முற்பட்ட ஒரு வழக்கமாகும், கி.பி. 2,3 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அவ்வழக்கம் மறைந்து விட்டது - தாழிகள் பல மிகப் பெரியவையாக இருந்த காரணத்தால்
மா இருந்தாழி (நற் 271)
ஓங்குநிலைத்தாழி (அகம் 275)
கண்ணகன்தாழி (புறம் 228)

எனக் குறிக்கப்பட்டுள்ளன. இவை கைகளாலும் (Hand made), சக்கரங்களாலும் (Wheel made) செய்யப் பெற்றிருந்தன.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இறந்தான். மிகப்பெரும் புகழ்கொண்ட இவனுக்கு மிகப் பெரிய தாழி அல்லவா வனைய வேண்டும். உலகையே சக்கரமாகக் கொண்டு, இமய மலையையே மண்ணாக வைத்துப் பெரிய தாழியைவனைய வேண்டும். அது உன்னால் முடியுமா? என்று வேட்கோவனைப் பார்த்து வினவுகிறார், ஐயூர் முடவனார் என்னும் புலவர் (புறம் 228).
'அன்னோன் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை யாயின் எனையதூஉம்
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே'
என்பது ஐயூர் முடவனார் பாடலாகும்.
கணவன் மனைவி இருவரையும் ஒன்றாகத் தாழியுள் அடக்கம் செய்ய வேண்டும். அதனால்
'வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
அகலிதாக வனைமோ'.
எனக் கூறுகின்றார் ஒரு புலவர் (புறம் 256).

தாழி வனைவோர் 'கலம்செய் கோ' எனப்பட்டனர்.
சங்ககாலச் சோழமன்னர்கள் தாழிப் புதையல் வழக்கத்தை ஏற்படுத்தினர் என்று மூவருலாக் கூறுகிறது.
'பதுமக் கடவுள் படைப்படையக் காத்த
முதுமக்கட் சாடி முதலோன்'
என்று பண்டைச் சோழன் ஒருவன் புகழப்படுகின்றான். (குலோ உலா 12).

யவனர்

சங்ககாலத்தில் தமிழ்நாட்டோடு யவனர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். கிரேக்கர், ரோமானியர், எகிப்தியர், பாரசீகர், அராபியர் ஆகிய அனைவரையும் 'யவனர்' என அழைக்கும் வழக்கம் இருந்தாலும் பெரும்பாலும் ரோமானியரே மிகுதியாகத் தமிழகம் வந்தனர்.

மேற்குக் கடற்கரைக்கு மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம், சில விலங்குகள், பறவைகள் ஆகிய பல பொருள்களுக்காக வந்த ரோமானியர் பாலக்காடு, போளுவாம்பட்டிக் கணவாய் வழியாகக் கொங்கு நாட்டுக்கு வந்து பல வண்ணக் கல்மணிகளை விரும்பி வாங்கினர். சோழநாடு, பாண்டிய நாட்டின் துறைமுக நகரங்கள் வரை சென்றனர். கிழக்குக்கரை முத்துக்களையும் பெற்றனர். ரோம் நாட்டவரின் ரெளலடெட், அரிட்டைன் என்ற உயர்வகைப் பானை ஓடுகள், அம்போரா என்னும் கூர்முனை மதுக்குடங்கள், ரோமானிய சுடுமண் பொம்மைகள், ரோம அரசரின் பொன், வெள்ளி, செம்பு நாணயங்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன. அகஸ்டஸ் (கி.மு. 44 - 14); டைபீரியஸ் (கி.பி. 14 - 37); நீரோ (கி.பி. 54 - 68) போன்ற ரோம் நாட்டு அரசர்களின் பெயரும் உருவமும் பொறித்த நாணயங்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன.

A slashed Roman Aureus of Augustus

மிளகு யவனர்கட்கு மிகவும் பிடித்தமான பொருள். அதனை 'யவனப்பிரியா' என அழைத்தனர். யவனர் கப்பல்களில் பொன்னொடு முசிறிக்கு வந்து பொன்னைக் கொடுத்துவிட்டு கப்பலில் மிளகை ஏற்றிச் செல்வர். 'சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி'
என அகநானூறு (149) கூறும்.

'யவனர் இயற்றிய வினைமாண் பாவை' (நெடுநல் 101)
'வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமாண் நல் இல்' (முல்லை 61-62)
'நயனில் வன்சொல் யவரைப் பிணித்து
நெய்தலைப் பெய்து கையிற் கொளீஇ' (பதிற். பதிகம் - 2)
'யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன் செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்க இனிது ஒழுகுமதி' (புறம் 56)

என்பன சங்க இலக்கியம் குறிக்கும் யவனர் பற்றிய தொடர்களாகும். இத்தொடர்பு 2000 ஆண்டுகட்கு முற்பட்டதாகும்.

தொல்லெழுத்தியல்

பழங்காலக் குகைகளில் உள்ள சமணப்பாழிகளிலும், அகழ்வாய்வில் கிடைத்த பானை ஓடுகளிலும், பழங்காசுகளிலும், மோதிரங்களிலும், முத்திரைகளிலும், கற்களிலும் ஏறக்குறைய 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தொல்லெழுத்துக்கள் பல காணப்படுகின்றன. இவற்றைத் 'தமிழி' என அழைப்பர். கரூர் அருகேயுள்ள புகலூர் ஆறுநாட்டார் மலையில் பதிற்றுப்பத்து 7, 8, 9 ஆம் பத்திற்குரிய அரசர்கள் அதே வரிசையில் குறிக்கப்பட்டுள்ளனர்.
'மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் (இ) ளங்
கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல்'
என்பது ஆறுநாட்டார்மலைத் தமிழிக் கல்வெட்டாகும்.


மதுரை அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தை அந்துவன் பாடியதாகச் சங்க இலக்கியம் கூறுகிறது. அதே மலைக் குகையில் 'அந்துவன் கொடுபித்தவன்' என்ற 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழிக் கல்வெட்டு உள்ளது. (அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை. அகம் 59)

திருக்கோவிலூரைச் சங்க இலக்கியம் 'கோவல்' என்று கூறும். மலையமான் ஆட்சிப்பகுதி. தகடூர் அதியமான் மலையமானை வென்று கோவலை அழித்தான் என்று அவ்வையார் பாடுகிறார் (புறம் 99). திருக்கோவிலூர் அருகில் உள்ள ஐம்பையில் அதியமான் சமண முனிவர்கட்குப் பாழி அமைத்துக் கொடுத்த செய்தி தமிழிக் கல்வெட்டொன்றில் கூறப்படுகிறது.

'ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி' என்பது ஜம்பைக் கல்வெட்டாகும். அசோகனின் பிராமிக் கல்வெட்டில் 'ஸதியபுத்ரர்' குறிக்கப்படுகின்றனர். 'அதியாமகன்' என்ற சொல்லே ஸதியபுதோ எனக் குறிக்கபட்டுள்ளது. எனவே தகடூர் அதியமான் மரபில் ஒருவன் அசோகன் காலத்தவன் என்பதில் ஐயமில்லை.

மாங்குளம் தமிழிக் கல்வெட்டில் 'நெடுஞ்செழியன்' என்ற பெயர் காணப்படுகிறது. அந்தை, ஆந்தை, நள்ளி, பிட்டன், கீரன், ஓரி, பரணன், சாத்தந்தை, பண்ணன், வண்ணக்கன் போன்ற சங்க இலக்கியங்களில் மட்டுமே பயின்று வரக்கூடிய பல சொற்கள் தமிழி என்ற தொல் எழுத்துக்களில் எழுதப்பட்டுக் கிடைத்துள்ளன. குறவன் (நற் 201), தித்தன் (புறம் 80), தாயன் (குறு 319), சாத்தன் (நற் 370), வேட்டுவன் (அகம் 36), குட்டுவன்கோதை (புறம் 54), கொல் இரும்பொறை (புறம்53), மாக்கோதை (புறம் 48), பெருவழுதி நற் 55) என்ற தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகளும், மோதிரங்களும், காசுகளும் தமிழ்நாட்டில் பெரும்பாலும் கரூர்ப் பகுதியில் கிடைத்துள்ளன. இவற்றின் எழுத்தமைதி கொண்டு இப்பெயர்கள் எறக்குறைய 2000 ஆண்டுகட்கு முற்பட்டவை என அறிகின்றோம்.

புலி முத்திரை

புகார் நகரின் துறைமுகத்தில் சங்ககாலத்தில் பொருள்களுக்குப் புலி முத்திரை பொறிக்கப்பட்டதாகப் பட்டினப்பாலை கூறிகிறது.
'அளந்து அறியாப் பலபண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அருங்கடிப் பெரும் காப்பின்
வலியுடைவல் அணங்கின் நோன்
புலி பொறித்துப் புறம் போக்கி'

என்பது பட்டினப்பாலைப் பகுதி (131 - 135). அவ்வாறு புலிச்சின்னம் பொறிக்கப் பயன்படுத்திய முத்திரையொன்று பூம்புகார் நகரில் அண்மையில் கிடைத்துள்ளது.

கடல் கடந்த சான்றுகள்

சங்கத் தமிழர் கடற்செலவில் தேர்ந்தவர்களாக விளங்கினர். கடல் கடந்து பல நாடுகளுக்கும் சென்றுள்ளனர். > 'நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக' (புறம் 66)

'சினம் மிகு தானை வானவன் குடகடல்
பொலம்தரு நாவாய் ஓட்டிய அவ்வழி
பிறகலம் செல்கலாது' (புறம் 126)

என்பன அதைப்பற்றிய சான்றுகளுட் சிலவாகும். பருவக் காற்றின் பயந்தெரிந்து 2000 ஆண்டுகட்கு முன்பு தமிழர் 'கப்பலோட்டிய' தமிழர்களாக வாழ்ந்துள்ளனர் என்பதை 'வளிதொழில் ஆண்ட' என்ற தொடர் சிறப்புடன் விளக்குகிறது.

தமிழ்நாட்டில் வெளிநாட்டார் குறிப்புகளும், வெளிநாட்டார் தொல்பொருள்களும் கிடைத்துள்ளன. பிற வெளிநாடுகளில் இதுவரை சங்காலத் தமிழகச் சான்றுகள் பெரும்பாலும் அகப்படாமல் இருந்தன. அண்மைக் காலத்தில் மேற்கு நாடுகளிலும், கிழக்கு நாடுகளிலும் சங்ககாலச் சான்றுகள் பல கிடைத்துள்ளன. எகிப்து நாட்டில் நைல்நதிக் கரையில் உள்ள 'குவாசிர் அல் காதிம்' என்னும் ஊரில் அமெரிக்க நாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் கண்ணன், சாத்தன் என்ற சங்ககாலத் தமிழி எழுத்துப் பொறிப்புக்கள் கிடைத்துள்ளன.

எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் லெய்டன் பல்கலைக்கழகத்தார் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 'கொற்ற பூமான்' என்ற சங்ககாலத் தமிழி எழுத்துக்கள் பொறித்த மதுச்சாடி கிடைத்துள்ளது. இவையிரண்டும் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துப் பொறிப்புக்கள் ஆகும்.

வியன்னா அருங்காட்சியகத்தில் உள்ள 'பேபிரஸ்' எனப்படும் பண்டைய தாளில் எழுதப்பட்ட கி.பி. முதல் நூற்றாண்டு ஆவணத்தில் முசிறி வணிகன் ஒருவன் கப்பலில் ஏற்றிச் சென்ற வாசனைப் பொருள், தந்தப் பொருள், துணிகள் பற்றிய செய்திகளும். அவற்றின் எடையும் கூறப்பட்டுள்ளது. ஒரு கப்பலில் 150 வணிகரின் பொருள்கள் இருந்தன என்று கூறப்பட்டுள்ளது.


தாய்லந்து நாட்டில் கிளாங்தோம் நகரில் நடத்திய அகழாய்வில் சோழரின் சதுர வடிவான புலிபொறித்த ஒரு செப்புக்காசும், 8 x 4 சென்டி மீட்டர் அளவுள்ள தங்கம் மாற்றுரைத்துப் பார்க்கும் பட்டைக்கல் 'பெரும்பத்தன் கல்' என்ற சங்ககாலத் தமிழிப் பொறிப்போடு கிடைத்துள்ளது. இந்த அயல்நாட்டுச் சான்றுகள் அனைத்தும் 2000 ஆண்டுகட்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

தமிழகத்திலும், மேலை நாடுகளிலும், கீழை நாடுகளிலும் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பல்வேறு தொல்பொருட்கள் மூலமும், அறிவியல் பூர்வமாக கால நிர்ணயம் கணிக்கப்பட்டதில் அவை சுமார் 2000 ஆண்டுகட்கு முற்பட்டவை எனத் துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் மேல் எல்லை கி.மு. 8 ஆம் நூற்றாண்டு என்றும், கீழ் எல்லை கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றோடு சங்க இலக்கியம் பல்வேறு வகைகளில் நெருங்கிய தொடர்பு உள்ளவையாக இருப்பதால் சங்க காலமும் அக்காலமே என்று உறுதிப்படுகிறது. எனவே தொல்லியல் நோக்கில் சங்க காலம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை என ஓரளவு நாம் கணிக்கலாம்.