Saturday, April 8, 2017

குலம் ஒரு ஆய்வு!

குலம்: ஒரு  ஆய்வு!
♢"♢"♢"♢"♢"♢"♢"♢"♢"♢
குலம் என்பது பல்வேறு வர்ணங்களின் ஒருங்கிணைப்பாக இருக்கலாம். பல்வேறு ஜாதிகளின் ஒருங்கிணைப்பாகவும் இருக்கலாம்.

இந்தச் சாதிகளின் ஒருங்கிணைப்பான குலம் ஒரே வர்ணத்திடமும் இருக்கலாம். அதாவது, பல்வேறு பட்ட ஜாதிகளைச் சேர்ந்த ஆனால் க்ஷத்திரிய வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும், க்ஷத்திரிய குலத்தார்.

அதே போல, வேறுபட்ட வர்ணத்தவர்கள் ஒரு குல தெய்வத்தை வணங்குபவர்களாக ஒருங்கிணைந்தால், அவர்களும் ஒரு குலத்தவர்தான்.

அதாவது, குலம் என்றால் வேறுபட்ட ஜாதிகளோ, வேறுபட்ட வர்ணங்களோ ஒரு ஒற்றைக் குழுவாக ஒருங்கிணையும் சமூக அமைப்பு. ஒரு குலம் என்பது ஒரே வர்ணத்தைச் சேர்ந்த பல ஜாதிகளின் கூட்டு அமைப்பாகவோ, பல வர்ணத்தினரின் கூட்டமைப்பாகவோ இருக்கலாம். இவை சமூக கூட்டமைப்புகள்.

இங்கனம் சமூகக் கூட்டமைப்பு மட்டுமின்றி வேறு ஒரு விஷயத்தை வைத்து ஒரு குழுவாக அடையாளம் காணப்படுபவர்களையும் ஒரு குலத்தாராகவே நமது இலக்கியங்கள் அழைக்கின்றன. உதாரணமாக,  ஒத்த குணம் கொண்ட பலதரப்பட்ட மனிதர்களின் கூட்டமைப்பையோ, ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் கூட்டமைப்பையோ குலம் எனும் சொல் குறிக்கலாம்.

இங்கனம் பல பொருள் தரும் ஒரு சொல்லாக குலம் எனும் வார்த்தை இருப்பதால், நம் இலக்கியங்களில் எந்த வகையான கூட்டமைப்பை குலம் எனும் வார்த்தை குறிக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

உதாரணமாக, இந்த திருவாய்மொழி பாடலைப் பாருங்கள்:

"குலம் தாங்கு சாதிகள்" நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலம் தானிலாத சண்டாள சண்டாளர்களாயினும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற்கு ஆள்
என்று உள்கலந்தார், அடியார் தம் அடியார் எம் அடிகளே.

திருவாய்மொழியின் இந்தப் பாடலின் முதல் அடி, தெளிவாகவே குலம்/சாதி சமன்பாட்டை விளக்கி விடுகிறதே. ஒரு குலம் என்பது நான்கு வர்ணத்தாரையும் கொண்டது என்கிறது இப்பாடல்.

இந்தப் பெரிய புராணப் பாடலைப் பாருங்கள்:

வாரணச் சேவலோடும் “வரிமயிற் குலங்கள்” விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவேலோற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை

இங்கே, மயில் எனும் உயிரினங்கள் ஒன்று திரண்ட கூட்டமைப்பு எனும் பொருளைச் சுட்டுகிறது குலம்.

மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள் “குலப் புகழ்ச் சோழனார்” தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்ட வர்த்தனமாம் பண்பு
பெற்ற வெங் களிறு கோலம் பெருகு மா நவமி முன்னாள்

இங்கே, சோழ நாட்டில் தன்னுடைய குலத்தின் பெருமையை நிலைநாட்டிய சோழ அரசன் பாராட்டப்படுகிறான்.

“வள்ளல் குல” பூடணன் திங்கள் வாரம் தொடுத்து சிவதருமம்
உள்ள எல்லாம் வழாது நோற்று ஒழுகும் வலியால் தன் நாட்டில்
எள்ளல் இல்லா வேதியரை இகழ்ந்தான் அதனான் மழை மறுத்து
வெள்ளம் அருக வளம் குன்றி விளைவு அ•கியது நாடு எல்லாம்

இப்பாடலில், வள்ளல் குணம் கொண்டவர்களை ஒரு குழுவாகக் கருதி, அக்குழுவை குலம் என்று அழைக்கிறார்கள்.

அதே போல கீழே உள்ள பாடல்களிலும் குலம் என்பது வெவ்வேறு குழுக்களை குறிப்பதைக் காணலாம்.

“கானவர் குலம்” விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட
ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறி ஆட்டோ டும்
ஆன அத் திங்கள் செல்ல அளவில் செய் தவத்தினாலே
பான்மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது//

கம்ப ராமாயணத்திலும் குலம் பற்றிப் பேச்சு வருகிறது:

‘விலங்கினர் உயிர் கெட விலக்கி, மீள்கலாது,
இலங்கையின் இனிது இருந்து, இன்பம் துய்த்துமேல்,-
“குலம் கெழு காவல“- குரங்கின் தங்குமோ?
உலங்கும் நம்மேல் வரின், ஒழிக்கற்பாலதோ?
          =×=
கூவி இன்று என்னை, நீ போய், “தன் குலம்” முழுதும் கொல்லும்
பாவியை, அமருக்கு அஞ்சி அரண் புக்குப் பதுங்கினானை,
தேவியை விடுக! அன்றேல், செருக் களத்து
எதிர்ந்து, தன்கண் ஆவியை விடுக!” என்றான், அருள் இனம்
விடுகிலாதான்.
            =×=
அள்ளி மீது உலகை வீசும் “அரிக் குலச்” சேனை நாப்பண்,
தெள்ளு தண் திரையிற்று ஆகி, பிறிது ஒரு திறனும்  சாரா
வெள்ளி வெண் கடலுள் மேல்நாள் விண்ணவர் தொழுது வேண்ட.
பள்ளி தீர்ந்து இருந்தான் என்னப் பொலிதரு பண்பினானை;
            
அதாவது, குலம் எனும் வார்த்தை விரிந்து பலவற்றையும் உள்ளடக்கும் சொல்.

அதாவது குலம் எனும் அந்த வார்த்தை எதைக் குறிக்கிறது என்பதை அந்த வார்த்தையோடு சேர்ந்து வரும் மற்ற வார்த்தைகளால் தெளிவாக அறியலாம்.

குலம் என்பது பல்வேறு ஜாதியினரை, பல்வேறு மதத்தினரை, பல்வேறு மொழியினரை, பல்வேறு வர்க்கத்தினரை அவர்களுக்கு இடையே இருக்கும் ஒரு ஒற்றுமையின் அடிப்படையில் ஒருங்கிணைக்கும் ஒரு அற்புதமான சமூக அமைப்பு.

எனவே, குலம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும்தான் குறிக்கிறது என்கிற பொருளை கொள்வது தவறு. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூச்சலிடுகிற பலருக்கு இவ்வித்தியாசம் தெரியாததால், ஜாதியை ஒழிப்பது போல குலத்தையும் ஒழிக்க வேண்டும் என்கின்றனர். திருக்குறளில் குலம் எனும் சொல் ஜாதியை குறிப்பதால், திருக்குறள் ஒரு சாதீய நூல் என்கின்றனர். வேறு சிலரோ தங்களின் ஜாதீய பெருமை பேச திருக்குறளை விதந்து ஓதுகின்றனர். அந்தோ பரிதாபம் !

இது தெய்வத் தமிழ்  இலக்கியங்களுக்கு மட்டுமல்லாது, அறிஞர்களின் மொழியான செம்மொழியிலும் வருகிறது. அவற்றை வாசிப்பவரும் இங்கனம் தவறாகப் பொருள் கொண்டு விடுகிறார்கள். உதாரணமாக, பகவத் கீதையில் வரும் “அபிஜனவான்” எனும் வார்த்தை.

आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया ।
यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहिताः ॥१६- १५॥

adhyosbijanavanasmi kosnyos sti sadruso maya |
yakshye dasyami modishye ityajnanavimohitah ||(16 – 15)||

இங்கே “அபிஜனவான்” என்பதை விளக்க நம் ஆதி ஷங்கரரும், ஸ்ரீ ராமானுஜரும் குலம் என்கிற வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர். இங்கேயும் “குலம்” என்பதை ஜாதி என்று தவறாகப் பொருள் கொண்டு, தன் ஜாதியின் உயர்ந்த குணத்தை மதிப்பவன் அரக்க குணம்  கொண்டவன் என்று தவறாகப் பொருள் கொண்டு விடுகிறார்கள் சிலர். இவர்களுக்கு ஸாஸ்திரங்களில் தேர்ச்சி இல்லாததுதான் இத்தவறான புரிதலுக்குக் காரணம்.

அதிலும், ஜாதி அழிய வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் இந்த தவறான பொருளை வைத்து ஜாதியை ஒழிக்க வாதிடுகிறார்கள். பகவத் கீதை ஜாதி ஒழிப்பை முன்வைக்கும் நூல் என்று சொல்லுமளவு போகிறார்கள். ஆனால், ஆதி ஷங்கரர் மற்றும் ஸ்ரீ ராமானுஜரின் மரபில் வந்தவர்கள் இதன் சரியான பொருளைச் சொல்லி விளக்கி விடுகிறார்கள். அவர்கள் தரும் சரியான மொழி பெயர்ப்பு இதோ:

ஸ்ரீ ராமானுஜர் உரை:
- - - - - - - - - - - - - - - - - - -
I am wealthy and “nobly-born“; who else is equal to me? I shall sacrifice, I shall give charity, I shall rejoice’ — thus they think, deluded by ignorance.

ஆதிசங்கரர் உரை:
- - - - - - - - - - - - - - - - -
I am rich and “well-born“. Who else is
equal to me, I will sacrifice, I will give, I will rejoice.” Thus deluded by unwisdom.

ஆதி சங்கரர் “குலம்” என்பதற்கான பொருளை பிறப்பு அடிப்படையில் கிடைக்கும் தகுதி என்று சொல்லுகிறார். அதன் மூலம், பிறப்பு அடிப்படையில் கிடைக்கும் இந்த கர்வத்தை அரக்க குணம் என்கிறார். ஆதி சங்கரர் எனும் சமூக சமத்துவத்தை எங்கும் போதித்த அந்த அத்வைதிக்கு பன்னிரண்டாயிரம் கோடி நமஸ்காரங்கள் !

இவை ஆங்கில மொழி பெயர்ப்புக்கள். செம்மொழி மூலத்தில் குலம் என்பதற்குச் சரியான மொழிபெயர்ப்பு இதுதான். ஸ்ரீ ராமானுஜ பாஷ்யத்தில் இப்படிச் சொல்லுகிறார்:

“ஸ்வத ஏவ உத்தமகுலே ப்ரசூத: அஸ்மி”

The demoniac think like the following examples illustrate. I am the most powerful. I was born into a “dynasty of aristocracy” and wealth. Who else in this world is equal to me? Who else by dint of their exertions have acquired every pleasure there is to enjoy and secured so much happiness and stability?

http://www.bhagavad-gita.org/Gita/verse-16-10.html

மற்ற பாஷ்யக்காரர்கள் இந்த வார்த்தைக்கான பொருளை அரிஸ்டோக்ராட் எனவும், பெரும் செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் பொருள் தருகிறார்கள்.

“அபிஜனவான்” எனும் சொல்லில் ஜனம் என்பதை சமூகம், சமூகப் பிரிவு, குடி என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். இதில் “அபி” எனும் முன்சேர்க்கை உள்ளது. அது “அப்யதே” என்பதில் இருந்து வந்திருக்கலாம்.

அந்த வகையில் பார்த்தால்,  கிருஷ்ணர் சொல்லுவது சமூகத்தில் உள்ள “வர்க்கத்தை” என்று பொருள் கொள்வதில் தவறு இல்லை.

உயர்ந்த குலம் என்பதை “எங்கள் குடும்பம் திராவிட பாரம்பரியத்தில் வந்தது”, “நாங்கள் 7 தலைமுறையாக பகுத்தறிவுவாதிகள்”, “பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் எல்லாம் பேராசிரியர்கள்”, “எங்கள் குடும்பம் பாரம்பரியமாக இடங்கை பிரிவைச் சேர்ந்தது”, “பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் பிரம்மச்சாரிகள்”, “பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் தாழ்த்தப்பட்டவர்கள்”, “பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் உயர்த்தப்பட்டவர்கள்”, “பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் சூத்திரர்கள்”, “பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் தலித்துகள்” என்று கர்வம் கொள்வதை கிருஷ்ணரும், ஆதி சங்கரரும் அரக்க குணம் என்கிறார்கள்.

குலத்தில் பிறத்தல், சாதியில் பிறத்தல், இந்தியனாகப் பிறத்தல், நடுத்தர குடும்பத்தில் பிறத்தல், ஹிந்துவாகப் பிறத்தல், தமிழனாகப் பிறத்தல், ஆணாகப் பிறத்தல், பெண்ணாகப் பிறத்தல், அலியாகப் பிறத்தல், ….

இவை அனைத்துமே பிறப்படிப்படையில் வரும் சமூக பிரிவினைகள்தான். ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவைதான். ஒன்றை மற்றொன்று பாதிக்கும்தான்.

ஆனால், பிறப்பு அடிப்படையில் வருவதால் இவை அனைத்தும் “சாதி” என்று சொல்லுவது மிகப் பெரிய பிரஷை வைத்து எல்லாவற்றின் மேலும் கறுப்பு மை தீட்டுவதாக அமைந்து விடும்.

பகவத் கீதையை கொலைகார நூல் என்று கருணாநிதி & கோ சுருக்குவது போல, அதை ஒரு சாதி ‘ஒழிப்பு’ நூல் என்று சுருக்குவதும் சரியல்ல. இத்தவறுக்குக் காரணம்  குலம் எனும் சொல், ஜாதியை மட்டுமே குறிக்கிறது என்கிற தவறான புரிதலே.

ஸர்வ நிச்சயமாக, எல்லாவிதமான தற்பெருமை மனப்பான்மைகளையும் கீழான குணமாகச் சொல்லுகிறது பகவானின் கீதை. அதன்படி, தான் பிறந்த ஜாதியை வைத்து  தன்னை உயர்ந்தவன் என்று எண்ணும் மனப்பான்மையும் நிச்சயம் கீழான குணம்தான்.

ஒரு ஸ்லோகத்தின் பொருளை தவறாகப் புரிந்துகொள்வதுதான் பிரச்சினை. மூலத்தில் இல்லாத பொருளைத் தனது விருப்பம்போல பொருள் புரிந்துகொள்வது தவறான புரிதலை உண்டாக்கி, அதனால் ஸ்லோகத்தின் நோக்கத்தை சிதைக்கிறது.

நமது முன்னோர்கள் நமக்காக தந்துவிட்டுப் போன விஷயங்களைச் சரியாகக் காக்க வேண்டிய கடன் நமக்கு இருக்கிறது. அவர்கள் என்ன பொருளில் சொன்னார்களோ அந்தப் பொருளில் மட்டுமே நாம் அதை புரிந்துகொள்ள வேண்டும். நமது விருப்பு, வெறுப்புகளை திணிக்கக் கூடாது.

எங்கெல்லாம் “குலம்” என்பது வர்ணத்தை குறிக்கிறதோ அங்கெல்லாம் அந்த வர்ணத்தையும், எங்கெல்லாம் ஜாதியை குறிக்கிறதோ அங்கெல்லாம் ஜாதியையும் சேர்த்து உபயோகித்து இருக்கிறார்கள் நம் முன்னோர்.

குலம் எனும் வார்த்தையை சாதியைக் குறிக்க அல்லது வர்ணத்தைக் குறிக்கப் பயன்படுத்தும்போது, மிகத் தெளிவாகவே அங்கு குறிக்கப்படும் குலம், சாதி அல்லது வர்ணத்தைக் குறிக்கிறது என்பது தெரியும்படிதான் தெள்ளு தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன.

நாம் படிக்கும்போது அது சாதியைக் குறிக்கிறதா, வர்ணத்தைக் குறிக்கிறதா, அரக்க யக்ஷ மனித தேவ குலத்தைக் குறிக்கிறதா என்பது தெளிவாகப் புரியும்படி நம் தாத்தாக்களும் பாட்டிகளும் எழுதி இருக்கிறார்கள்.

வேத சமூகத்தின் வேர் குலமே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
குலம் என்றால் பல்வேறுவர்ணத்தினரும் ஒரு குழுவாக இணைந்து செயல்படும் ஒரு அமைப்பு. வேதங்களில் (மற்றும் இதிகாச புராணங்களில், பௌத்த நூல்களில்) சொல்லப்படும் அரசாட்சி முறைகள் ஜனபத, சங்க முறைகள். இந்த அரசாட்சி முறைகளை நிர்வகித்தவை குலங்கள்தான்.

ஒரு தேசத்தின் அடிமட்ட சமூக அமைப்புகளான குலங்களிடமே நாட்டின் அனைத்து அதிகாரங்களும் பரவி இருந்தன. வேத சமூகத்தின் வேர்முறை ஜனநாயக அமைப்புகளான குலங்கள் தங்களுக்கான வரையறைகளைத் தாங்களே வடிவமைத்துக் கொண்டவை. ஸ்வராஜ்ய, பௌஜ்ய, வைராஜ்ய போன்றவை இந்தவகைக் கோட்பாடுகளில் சில மட்டுமே.

இந்தக் குலங்களில் சிலவற்றின் பெயர்களே கூட இந்தக் கோட்பாட்டு முறையினை ஒட்டியே அமைந்தவை. உதாரணமாக, போஜர்கள் மற்றும் மஹாபோஜர்கள்.

மஹாபோஜர்கள் என்பவர்களை அப்படியே மொழிபெயர்த்தால் மிகப்பெரிய போஜர்கள் என்று பொருள் வரும். அவர்கள் மிகப் பெரிய போஜர்கள் என்றால், போஜர்கள் எனப்படும் இன்னொரு சங்கத்தினர்/குலத்தினர் சாதரண போஜர்கள் என்று பொருளாகிறது. அது இழிவான ஒன்றல்ல.

இந்தப் பௌஜன்ய கோட்பாட்டினை ஏற்றுக்கொண்ட நான்கு யாதவ குலங்களைப் பற்றி மகாபாரதத்தில் பார்க்கிறோம்: அபீரர்கள், அந்தகர்கள், வ்ருஷ்ணிகள், சதவதர்கள். இவர்கள் அனைவரும் யாதவர்கள்தான்.

அவர்களில் அனைத்து வர்ணத்தவரும் உண்டு. அதாவது, யாதவ பிராமணர்கள், யாதவ ஷத்திரியர்கள், யாதவ வைசியர்கள், யாதவ சூத்திரர்கள். இன்றும் யாதவ பிராமணர்கள் இருக்கிறார்கள். தங்களது பிராமண குலத்தில் திருமண உறவுகளைத் தேடும் ஒரு உதாரணம்: http://www.bandhan.com/male/yadav+brahmin/.

இந்த பௌஜன்ய கான்ஸ்டிட்யூஷனை ஏற்றுக்கொண்ட மரபினர் வெகு வெகு பிற்காலத்தில் அமைத்ததுதான் போஜராஜ்யம். சைவ உணவை உண்ட குஜராத்திகளான இவர்கள் போஜராஜாவின் தலைமையில் முகமதியர்களை துவம்சம் செய்தனர்.  அவர்களுடைய ஆக்கிரமிப்பு மசூதிகளை எரித்தனர்.

அபீரர்கள், அந்தகர்கள், வ்ருஷ்ணிகள், சதவதர்கள் எனும் இந்த நான்கு யாதவ குலங்களில் வ்ருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவர்தான் பகவான் கிருஷ்ணன். அவருடைய ஜாதி என்ன என்பது யாருக்கும் தெரியாது. பகவான் கிருஷ்ணர் பிறந்த குடும்பம் மட்டுமல்ல, வளர்ந்த குடும்பமும் ஷத்திரிய வர்ணத்தவராக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

'அதாவது, யாதவர் என்பது குலங்களே. அது ஜாதி அடையாளம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டிலோ ஆங்கிலேயர் திணித்த கேஸ்ட் முறையின்படி யாதவர் என்றால் கோனார் கேஸ்ட் என்று இன்று ஆகிவிட்டது'. 😦

யாதவர்கள் என்போர் ஒரு மிகப் பெரிய குலத்தினர். (ஆங்கிலேயர் விட்டுச் சென்ற காலனிய அடிமைத்தனத்தைக் கட்டிக் காக்கும் திராவிடர் கழக வீரமணி கோனார் இதை ஒத்துக்கொள்ள மாட்டார். ஏனெனில், இது ஆதாரபூர்வமான அறிவியல் பூர்வமான உண்மையன்றோ.)

ஒன்று திரண்ட சமூக அமைப்புகளான இவை குலம் என்கிற பெயரில் இந்திய இலக்கியங்களில் அழைக்கப்படுகின்றன. இவைதான் வேரடி ஜனநாயகத்தை, உலகின் முதல் ஜனநாயகக் குடியரசுகளை உருவாக்கின. நிர்வகித்தன.

இந்த குல அமைப்பு முறை தமிழகத்திலும் ஆழமாக இருந்த ஆதிகால சமூக அமைப்பு. சூரிய குல அரசர்கள், சந்திரகுலத்தவர், என்றெல்லாம் நாம் கேள்விப்படுகிறோம்.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு குலத்தவரும் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது, தங்கள் குல சின்னங்களை காசுகளில் அச்சடித்திருக்கிறார்கள். கல்வெட்டுகளில் செதுக்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும்  அவர்கள் இப்படி செய்திருக்கிறார்கள்.

உதாரணமாக,  சித்திரமேழியார் என்பது தமிழ்நாட்டில் இருந்த ஒரு குலம். சோழ ராஜ்யத்திற்கு உட்பட்ட குலம். இவர்கள் வடித்த கல்வெட்டு பற்றி தினமணியில் வந்த செய்தி: http://www.dinamani.com/edition_dharmapuri/dharmapuri/article882973.ece

வேதங்களில் இருக்கும் இந்த குலமுறை நிர்வாகம் மற்றும் அரசாட்சி பற்றி அரிதிலும் அரிதாகத்தான் புத்தகங்கள் பேசுகின்றன. தமிழ்நாட்டில் பிரபலமான தமிழ் வரலாற்றாசிரியர்கள் குலம் குறித்து எதுவும் எழுதவில்லை.

அதனால், இதுவரை குலம் குறித்த முழுமையான ஒரு பார்வை வெளியாகவில்லை. ஆனால், தர்மத்தையும், சத்தியத்தையும் எத்தனை நாட்கள் மறைக்க முடியும்? ஆங்காங்கே இதுகுறித்துத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த செய்தித் தாளில் வந்திருப்பது போல.

இச்செய்தியின்படி, 1062ம் பொது சகாப்தத்தைச் சேர்ந்த இந்த சித்திரமேழி குலத்தார்கள் தங்களுக்கென ஒரு மெய்க்கீர்த்தி வடித்திருக்கிறார்கள். இந்த மெய்க்கீர்த்தி இதுவரை கிடைத்த மெய்க்கீர்த்திகளில் இருந்து வித்தியாசமான தகவலைத் தருகிறது. மற்ற மெய்க்கீர்த்திகள் எல்லாம் ஒரு அரசனின் புகழ் பாடுவதாக இருக்கின்றன. ஆனால், இந்த மெய்க்கீர்த்தியோ சித்திரமேழி குலத்தாரின் புகழைப் பாடுவதாக இருக்கிறது.

நான்கு வர்ணத்தினரும் சேர்ந்து ஒருங்கிணைந்த, இந்த உலகங்கள் அனைத்தின் நன்மைக்காகவும் செயல்படுகிற குலமான இந்த சித்திரமேழி குலத்தவர் வடித்த ஸாஸனம் என்றுதான் இந்த ஸாஸனத்தில் ஆரம்பிக்கிறார்கள். செம்மொழியில் இருக்கும் அந்த ஸாஸனம் இங்கனம் சொல்கிறது:

ஸ்ரீமத் பூதேவி புத்ராநாம் "சாதுர்வர்ண
குலோத்பவ" ஸர்வலோ ஹிதார்த்தாய
சித்ரமேளஸ்ஸாஸனம்

அறம்வளர கலி மெலிய
செங்கோலே தெய்வமாகவும் திசை அனைத்துஞ்
செவிடுபடாமை சித்திரமேழி தம்மம்
இனிது நடாத்துகின்ற ஸ்ரீ ராஜேந்திர
சித்திரமேழிப் பெருக்காளரோம்

இதில்  உள்ள “சாதுர்வர்ண குலோத்பவ” என்பதைக் கவனியுங்கள். நான்கு வர்ணத்தினரும் சேர்ந்து ஒருங்கிணைந்து இந்த உலகங்கள் அனைத்தின் நன்மைக்காகவும் செயல்பட்ட குலமான இந்த சித்திரமேழி குலத்தவர் வடித்த ஸாஸனம் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்.

அனைத்து வர்ணத்தினரும் சேர்ந்து ஒரு குலமாகச் செயல்பட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய ஆதாரமாகிறது. எனவே, உயர்குலம் என்பது காலனியம் விட்டுச் சென்ற OC, BC, MBC போன்றவை அல்ல.

குலம் எனும் சமூக அமைப்பின் பெருமைகள்!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
'பல ஜாதியினரையும், பல வர்ணத்தினரையும் ஒன்று திரட்டி, அன்புடன் சம உரிமைகளுடன், அவர்கள் இணைந்து உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டின்படி, கூடி வாழும் அமைப்பே குலம்'.

அங்கனம் கூடி வாழ்வதால் வந்தடைந்த உயர்பண்புகளை வைத்து ஒரு குலத்தை உயர்குலத்தினர் என்று மற்ற குலத்தவர்கள் அக்காலத்தில் இருந்து மதித்தார்கள் என்பது தெளிவாகிறது. நம் தமிழ் இலக்கியங்களில்கூட குலம் பற்றிய விஷயங்கள் வருகின்றன. உயர்குலத்தவரின் குணங்கள் என்ன என்று அவற்றில் பேசப்படுகின்றது.

உதாரணமாக, திருக்குறளில் குடி என்ற பெயரிலும், குலம் என்கிற பெயரிலும் குலமே போற்றப்படுகிறது.

குலம் எனும் சமூக அமைப்பில் இருப்பவன் ஈகை குணம் கொண்டவன் எனப் புகழும் குறள்:

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

மாசற்ற குலத்தைச் சேர்ந்தவன் அவனுடைய குலம் எனும் சமூக மரபுகளின் வழிச் செல்வதால் தகுதியற்றதைச் செய்ய மாட்டான் எனப் புகழும் குறள்:

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்

ஒருவன் நல்ல குணங்கள் அற்று இருப்பானேயானால், அவன் குலம் எனும் அமைப்பைச் சேர்ந்தவன்தானா என்று ஐயம் வரும் எனும் குறள்:

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்

ஒருவனது பேச்சைக் கூட குலம் எனும் அமைப்பானது உயர்வானதாகவோ, தாழ்வானதாகவோ மாற்றும் என்கிற குறள்:

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்

ஒரு தனி மனிதன் தனக்கு நன்மை வேண்டும் என விரும்பினால் வெட்கப்பட வேண்டிய விஷயங்களைச் செய்ய வெட்கப்பட வேண்டும். ஆனால், குலம் எனும் சமூக அமைப்பில் சேர வேண்டும் எனில் அனைவரிடமும் பணிவுடன் இருக்க வேண்டும் எனும் குறள்:

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு

மேலே உள்ள குறளின் எதிரிடையான நிலையைப் பற்றியும் சொல்கிறார் திருவள்ளுவர். வெட்கப்பட வேண்டிய விஷயங்களை வெட்கப்படாமல் செய்வதால் ஒரு தனிமனிதன் கெடுகிறான். ஆனால், குலம் எனும் சமூக மரபுகளை பின்பற்றாவிட்டால் அவனால் அந்தக் குலமே அழிந்துவிடும் என்கிறார்.

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை

குலம் வேறு, குடி வேறு!
- - - - - - - - - - - - - - - - - - - - -

அதே போல, குடி எனும் வார்த்தையில் அவர் குறிப்பிடுவது கூட்டுக் குடும்பத்தை. குடி பற்றி சொல்லும் குறள்கள்:

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்

தேடினால், இன்னும் நிறையவே கிடைக்கும்.

சனாதன மதத்தைச் சேர்ந்த நாம் ஒற்றுமையாக சாதீய உயர்வு தாழ்வு இன்றி வாழ கண்டறிந்த அமைப்பு முறையே குல அமைப்பு முறை. வேதகாலத்தில் இருந்தே சனாதனமாக, அதாவது ஆரம்பம் முடிவு இல்லாத உண்மையாக, நம்மிடையே இருந்து வருவது. இதை ஒதுக்கி நாம் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்துவிட முடியாது என்பது என் முடிபும், துணிபுமாக இருக்கிறது.

2 comments:

  1. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  2. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர்.

    ReplyDelete