நத்தக்கோட்டை படுகொலை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்திய மண்ணில் வெள்ளையர் நடத்திய முதல் படுகொலை நெல்லைச் சீமையிலே நிகழ்த்தப்பட்டது. நிகழ்த்தப்பட்ட இடம் நத்தக் கோட்டை . வரலாற்றின் இருண்ட பக்கங்களை புரட்டிப் பார்த்தால் சற்றுக் கலங்கலாக தெரியும் ஒரு பாளையம் தான் நத்தக் கோட்டை .
நத்தக் கோட்டை . நெல்லைச் சீமையிலே பாளையங்கோட்டையிலிருந்து சுமார் 36 மைல் தொலைவு தென் மேற்கேயும் , ஆரல்வாய்மொழியிலிருந்து சுமார் 6 மைல் கிழக்கேயும் அமைந்த ஒரு சிறு பாளையம்.
ஆர்க்காடு நவாபிடம் பெற்ற உரிமையின் காரணமாக பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை கும்பினியார் பெறுகின்றனர். பல பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்ய முற்பட்டனர். இந்தச் சூழலில் 20-1-1754 அன்று தஞ்சையிலிருந்து இராமன் நாயக் என்பவன் சென்னை கோட்டைக்கு ஒரு மடல் எழுதுகிறான், " மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் தற்போது அறுவடைக் காலம் தொடங்குகிறது. நம் படைகளை அனுப்பினால் ஏராளமாக வசூல் வரும். தவறினால் மேலும் அடுத்த ஆண்டு வரை தாமதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு எழுதுகிறான். கும்பினி மேலிடம் கர்னல் அலெக்சாண்டர் ஹெரானையும், முகமதலியின் மூத்த சகோதரன் மாபூஸ்கானையும் வரி வசூல் செய்ய அனுப்புகின்றனர். இவர்கள் தலைமையில் கும்பினி படை தெற்குச் சீமை நோக்கி புறப்பட்டது.
மதுரை வந்த ஹெரானும் - மாபூஸ் கானும் படைகளுடன் நெல்லை நோக்கி பயணமாகின்றனர். சில பாளையங்கள் பணிந்து விடுகின்றன. பணியாத பாளையங்களின் மேல் படையெடுக்க ஆயத்தமடைகின்றனர். அதற்குள் ஹெரானை திருச்சிக்கு புறப்பட்டு வருமாறு மேலிடத்தால்ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
ஆனால் ஹெரான், வரி வசூல் செய்ய கேப்டன் பீவர் (Beaver) தலைமையில் 100 வெள்ளையர்கள், 300 சிப்பாய்கள் மற்றும் இரண்டு பீரங்கிகளுடன் நத்தக் கோட்டைக்கு அனுப்பி வைக்கிறான்.
பீவரின் படை 18 மணி நேர பயணத்திற்குப் பிறகு நத்தக் கோட்டை வந்து சேர்கிறது . இதனை எதிர்பார்க்காத நத்தக் கோட்டை பாளையக்காரர் தூதுவரை அனுப்பி சமாதானத்திற்கு முற்படுகிறார். வெள்ளையர் இதனை ஏற்காமல் தூது வந்த தூதுவனை சிறைப்பிடித்து விடுகின்றனர். கேட்ட தொகையை கொடுத்தால் தான் பிணைக்கைதியான தூதுவனை விட முடியும் என்று சொல்லி விடுகிறார்கள்.
கும்பினி படை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தூதுவன் தப்பி அரண்மனைக்கு சென்று விடுகிறான்.
அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த கும்பினிப் படை நத்தக் கோட்டை மீது தாக்குதல் தொடுக்கிறது. வெள்ளையர் பட்டாளமும், நாட்டுச் சிப்பாய்களும் பல அணிகளாகச் சேர்ந்து அக்கோட்டை முழுவதும் நாசம் செய்தனர். ஆண், பெண், முதியவர், குழந்தைகள் என ஒரே மூச்சில் 394 பேரை படுகொலை செய்து முடித்தனர். அதோடு ஆடு, மாடு, குதிரைகள் போன்ற விலங்குகளையும் வெட்டிச் சாய்த்தனர். அங்கிருந்த தானியங்களை கொள்ளையடித்தனர். இந்திய வரலாற்றில் வெள்ளையர் நடத்திய முதல் படுகொலை நத்தக் கோட்டைப் படுகொலை தான்.
இதைப் பற்றி இராபர்ட் ஆரம் (Robert Orme) தன்னுடைய History of Hindustan - 1861 என்ற நூலிலே எழுதுகிறார், " நாங்கள் வருந்துகிறோம். வருந்திக் கூறுகிறோம். இந்த முட்டாள்தனமான படுகொலைகள் புரிந்த படைகளும், அதிகாரிகளும் ஆங்கிலேயர்களே" என்றும் "கட்டவிழ்த்து விடப்பட்ட இரத்த வெறிக் கொடுமை" என்றும் பதிவு செய்கிறார்.
நண்பர்களே.'
வெள்ளையர் நடத்திய முதல் படுகொலையில் தப்பிய அறுவர் - அந்த நத்தக் கோட்டை வம்சாவளியினர் தப்பிச் சென்று கன்னியாகுமரி அருகிலுள்ள பஞ்சலிங்கபுரத்தில் வாழ்ந்து வருவதாக கால்டுவெல் கூறியுள்ளார்.
கோட்டைக்கருங்குளம்தான் பிரிட்டிஷ் ஆவணங்கள் குறிப்பிடும் நத்தக்கோட்டையாக இருக்கவேண்டும். நான் பஞ்சலிங்கபுரம் பகுதியில் களப்பணியாற்ற சிலரை ஒருவர் மூலமாக அனுப்பினேன். அங்கே அவர்கள் அளித்த தகவலின்படி பலர் தங்களது பகுதி சிங்கம்பட்டி ஜமீன் பகுதி என்கிறார்கள். கோட்டைக்கருங்குளம் ஊரினர் மிகுதியாக உள்ளனர். தப்பித்து சென்ற அறுவருடைய வம்சாவளியினரை கண்டறியும் முயற்சிகள் தொடர்கிறது
மறைக்கப்பட்ட எத்தனையோ வீர வரலாற்றில் நத்தக் கோட்டை படுகொலை முக்கியத்துவம் வாய்ந்தது.
...... மானமறவர்களின் வீரவரலாற்றைத் தேடுவோம்......
ஆதாரம் :
I. Country Correspondences military Dept. 1755 .
2. Dairy and consultation of public Dept. 1755
3 History of Tinnavely Dist. By Dr. Coldwell
4. History of Hindustan by Robert orme, 1861
5. திருநெல்வேலி சீமைச் சரித்திரம் - குரு குகதாசப் பிள்ளை
6. Vestiges of Madras Vol. II - H.D. Love, 1913
7. Tinnaveli Dist. gazetters by H.R. Pate. 1917.
நன்றி :
பேசும் ஆவணங்கள்
எம். செந்தூர பாண்டியன்
மருதுபாண்டியன் இரா.